Published:Updated:

“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

கால்நடைப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுஜூ.வி லென்ஸ்

“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

கால்நடைப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுஜூ.வி லென்ஸ்

Published:Updated:
“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”
“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சூழலில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் எனப் புகார் பறக்கிறது. துணைவேந்தர் திலகர் மீது அடுக்கடுக்கான அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் படிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், ‘‘எஸ்டேட் ஆபீசர் பொறுப்பில் இருக்கும் குப்புசாமியுடன் கைகோத்துக்கொண்டு துணைவேந்தர் திலகர் செய்துவரும் செயல்களால் பல்கலைக்கழகம் சீரழிந்து வருகிறது. துணைவேந்தருக்கு ஒரு தரகர் போல குப்புசாமி செயல்பட்டுவருகிறார். இதனால், எஸ்டேட் ஆபீசர் பதவியை நான்கு ஆண்டுகளாக நிரப்பாமல், எந்தத் தகுதிகளுமற்ற குப்புசாமியையே இன்சார்ஜ் ஆக தொடர்ந்து பணியில் வைத்துள்ளார் திலகர். தற்போது 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விறுவிறுப்பாக வேலை நடக்கிறது. ஒரு நியமனத்துக்கு 25 முதல் 30 லட்ச ரூபாய் வரை பேசப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்.

பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அன்பழகன், ‘‘ஆசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம் என்ற பெருமைகொண்டது இது. தனிப்பட்ட சிலரின் செயல்பாடுகளால் சீரழிந்து வருகிறது. நடந்துமுடிந்த உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் துணைவேந்தர் திலகர் பெருமளவு பண வசூல் நடத்தியுள்ளார். நேர்முகப் பாடம் நடத்தும் திறமைக்கு 10, நேர்முகத் தேர்வுக்கு 20 என்று 30 மதிப்பெண்களை வழங்கும் அதிகாரம் தேர்வுக்குழுவுக்குத் தரப்பட்டுள்ளது. அதாவது, கல்வித்தகுதி உள்ளிட்டவற்றில் 70-க்கு 68 மதிப்பெண்கள் பெற்றுள்ள திறமைசாலியாக இருந்தாலும், நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண் போட்டுத் தகுதியிழப்புச் செய்வார். அதேசமயம் ‘தங்களுடைய ஆட்கள்’ 70-க்கு 50 மதிப்பெண்களோடு இருந்தாலும், நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண்கள் வழங்கி அவர்களைத் தேர்வுசெய்வதுதான் இதன் நோக்கம்’’ என்றார் அன்பழகன்.

“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனியர் கான்ட்ராக்டர் ஒருவர், ‘‘அங்கீகரிக்கப்பட்ட கான்ட்ராக்டரான எங்களைத் தவிர்த்து விட்டு, கமிஷனுக்காக வெளியாட்களுக்குப் பணி ஒதுக்கப்படுகிறது. இதில் குப்புசாமியின் பினாமி கம்பெனியும் ஒன்று. 20 வருடங்களுக்கு மேலாக இந்தத் தொழிலில் இருக்கிற நாங்கள் தரமான கம்பி, சிமென்ட்டுகளைப் பயன்படுத்துகிறோம். வெளியாட்கள் 30 சதவிகிதம் கமிஷன் கொடுப்பதால் தரத்தில் சமரசம் செய்துகொள்கிறார்கள்.

25 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பணிகளுக்கு மேலாண்மைக்குழுவின் அனுமதி பெறவேண்டும். இந்த விதியை ஏமாற்ற, ஒரே வளாகத்தில் ஒவ்வொரு கட்டடத்துக்கு எனத் தனித்தனி டெண்டர் விட்டுச் சாமர்த்தியமாக ஒவ்வொன்றின் மதிப்பீட்டுத் தொகையும் 25 லட்சத்தை தாண்டாதவாறு பார்த்துக் கொள்கின்றனர். இப்படிப் பலவிதங்களில் நடக்கும் முறைகேடுகளால் பல்கலைக்கழகம் பாழாகிவருகிறது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து துணைவேந்தர் திலகரிடம் பேசினோம். ‘‘இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயப் பல்கலைக்கழகங்கள், மீன்வளப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களான 72 கல்வி நிலையங்கள் ஐ.சி.ஏ.ஆர் எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் (இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்) இயங்குகின்றன. பணி நியமனம் முதல் டெண்டர் விடுவது வரை அனைத்துக்கும் ஐ.சி.ஏ.ஆர்-க்கு என யு.ஜி.சி பிரத்யேகமாக வகுத்துள்ள வழிகாட்டுதல்களே பின்பற்றப்படுகின்றன. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தவிர, வேறு எந்தப் பற்றும் இதில் மாநில அரசுகளுக்குக் கிடையாது.

ஐ.சி.ஏ.ஆர் வழிகாட்டுதல்படி பல்கலைக் கழகத்தின் எல்லா பணிகளும் இ-டெண்டர் எனப்படும் ஓப்பன் டெண்டர் முறையில் வெளிப்படையாக விடப்படுகின்றன. பில்டிங் கமிட்டி, டெண்டர் கமிட்டி ஆகியவைதான் முழுக்க முழுக்க இதற்கான அனுமதியை வழங்குகின்றன. இறுதி ஒப்புதலுக்காக சம்பிரதாயமாகவே துணைவேந்தரிடம் கையெழுத்துப் பெறப்படும். நான் இதில் எங்கும் தலையிடமுடியாது. உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம், ஐ.சி.ஏ.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே செய்யப்படுகிறது. எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை.  நேர்முகத் தேர்வு என்பது வெறும் கேள்வி பதில் மட்டுமல்ல, வகுப்பு எடுப்பது, சின்ன டெஸ்ட் மற்றும் விண்ணப்பதாரர்களின் பயோடேட்டா இத்தனையும் உண்டு. ஐ.சி.ஏ.ஆர் தனித்தனியாக இதற்கென மதிப்பெண் வழங்குகிறது. இதில் நாங்கள் எப்படித் தலையிட முடியும்?

எஸ்டேட் ஆபீசர் நியமனத்திலும் எந்த விதிமீறல்களும் இல்லை. எனக்கு முன்பிருந்த துணைவேந்தர்தான் அவரை நியமித்தவர். பேராசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வாகனம் ஒதுக்கீடு செய்வதிலிருந்து ஊழியர்களின் வருகைப்பதிவேடு வரை பல அதிகாரங்கள் அவருக்கு உண்டு. சமயங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக வாகனம் கேட்பார்கள். இதற்கு மறுப்பதால் பலருக்கு அவர் மீது கோபம். அதனால், இப்படி புகார் கூறுகிறார்கள். போட்டியை ஏற்படுத்தியதால் தாங்கள் நினைத்தபடி அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் சில கான்டராக்டர்களுக்கு. பணியிட மாற்றம் கேட்டு மறுத்ததால் சிலருக்குக் கோபம். இப்படி தனிப்பட்ட காரணங்களினால் அதிருப்தி அடைந்தவர்கள் ஒன்றுகூடி என் மீது குற்றம் சுமத்துகின்றனர்’’ என்றார் அவர்.

“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்!”

ஆனால், அன்பழகன் இதையெல்லாம் மறுத்தார். ‘‘ஐ.சி.ஏ.ஆர் என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பு. அதற்கு மாநில பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை. ஆராய்ச்சி திட்டங்களுக்குச் சிறிதளவு நிதி உதவி தருவது தவிர, வேறு ஒன்றும் அது செய்வது கிடையாது. இந்தக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் சட்டப்படி உருவாக்கப்பட்டு, மாநில அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படுகிறது. பணி நியமனத்தில் முற்றிலும் யு.ஜி.சி விதிமுறைகளே பின்பற்றப் படுகின்றன. ஆனால், இதில் பல்கலைக்கழகத்துக்கு உள்ள சில அதிகாரங்களைப் பயன்படுத்தி, நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சம் 20 மதிப்பெண்கள் மட்டுமே தர வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி, சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள்.

டெண்டர் தொடர்பாக ஐ.சி.ஏ.ஆர் விதிமுறை பின்பற்றப்படுவதாகத் துணைவேந்தர் கூறுவது முற்றிலும் தவறு. டெண்டர்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தமிழக அரசின் டெண்டர் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. ‘பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை தவிர, மாநில அரசுக்கு எந்தப் பற்றும் இல்லை’ என்று துணைவேந்தர் கூறுவது கண்டிக்கத்தக்கது. மாநில பல்கலைக்கழகங்கள் முற்றிலும் மாநில  அரசின்  சட்டத்தின் அடிப்படையில், மாநில அரசின் நிதி உதவியைக் கொண்டே இயங்குகின்றன. பல்கலைக்கழகத்தில் படிப்பு, இட ஒதுக்கீடு, திட்ட செலவினம், நிதி ஒதுக்கீடு உட்பட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசிடமே உள்ளன.

‘பணிநியமனத்தில் ஐ.சி.ஏ.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம்’ என்று துணைவேந்தர் கூறுவதும் தவறு. ஐ.சி.ஏ.ஆர் அமைப்பில் ‘உதவிப் பேராசிரியர்’ என்ற பணியிடமே கிடையாது. அங்கு ‘சயின்டிஸ்ட்’ என்ற பணியிடம்தான் உள்ளது. அதற்கான தகுதிகள் வேறு. அவை பல்கலைக்கழகத்துக்குப் பொருந்தாது. எதற்கெடுத்தாலும் ஐ.சி.ஏ.ஆர் விதிமுறை என்பது கேள்வி கேட்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கே. கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றும் எஸ்டேட் ஆபீசர் பணியிடத்துக்குப் பல்லாண்டு காலம், உரிய தகுதியுள்ளவரை நியமிக்காமல், வேறு ஒருவரை இன்சார்ஜ் ஆக வைத்திருப்பதே மிகவும் தவறு.’ என்றார்.

இந்த நிலையில், துணைவேந்தர் மீதான புகார்களை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மேலாண்மைக்  கமிட்டி அமைத்திருக்கிறது. அதோடு பேராசிரியர் நியமனத்துக்கான நேர்காணலில், தகுதியற்ற நபர்களை தேர்வுக் குழுவில் நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்வாளர்களை 9-ம் தேதி வரை இறுதி செய்யக் கூடாது எனச் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்

‘பொறுப்பு வேந்தர்’ உள்ள மாநிலத்தில் பொறுப்பாக எல்லாம் நடந்துவிடுமா என்ற வேதனை வினா எழத்தான் செய்கிறது.

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism