
கொதிக்கும் இயக்குநர் கவுதமன்
ஜல்லிக்கட்டுப் போராட்டங்களில் பங்கேற்ற குறிப்பிட்ட சிலரை மட்டும் சம்மன் அனுப்பி விசாரித்துவருகிறது போலீஸ். டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமனிடமும் இப்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார், மெரினா போராட்டம் தொடர்பாக ஒரு மணி நேரம் கவுதமனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைப் போலவே, இவர் மீதும் வழக்குப் பதியப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி கவுதமனிடம் பேசினோம். “மெரினாவிலும், ராமேஸ்வரத்திலும், திருச்சியிலும் நான் பேசிய உரைகள்தான் பிரச்னைக்கு உள்ளாகி இருக்கின்றன. ‘இந்தியாவின் தலையில் டெல்லியும், காலில் தமிழகமும் இருப்பதால் மிதிச்சுக்கிட்டே இருக்கிறீர்களா? எங்க விவசாயி 500 பேர் செத்திருக்கான். எங்க மீனவனை எதிரிநாட்டு ராணுவத்தினர் சுட்டுக்கொல்றான்; நீங்க அவனோட கைகோத்துக்கிட்டு இருப்பீங்களா? கீழடி ஆராய்ச்சியை மூடப்பாக்குறீங்க... எங்க வரலாற்றை அழிக்கப் பாக்குறீங்க. எங்களை உங்களுக்குப் பிடிக்கலைனா, பிரிட்டன்ல நடந்ததைப் போல சட்டபூர்வமா பிரிக்கிறதுக்குப் பொதுவாக்கெடுப்பு நடத்துங்க’னு நான் பேசினதுக்குப் புள்ளி வைக்கிறாங்க. இது எல்லாமே வெளிப்படையா எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு முன்பு பகிரங்கமாப் பேசினதுதான்.
இந்திய எல்லைக்குள்ளேயே வந்து எங்க மீனவனைத் தாக்குறப்போ, அவனைக் காப்பாத்த வராம வேடிக்கை பாக்குது கடற்படை. ராமேஸ்வரத்தைக் காசியைப் போல காவி நகரமா ஆக்குறதுக்காக, மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மறைமுகமா இப்படி சதி நடக்குது. நான் இதைச் சொல்வது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல; தமிழரின் நலனுக்கானது. ஆனால், தமிழிசையும், ஹெச்.ராஜாவும் ‘தமிழ் உணர்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனச் சொல்லிவருகிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்த மாநில அரசும், எங்கள் மீது வழக்குகளை ஏவிவருகிறது. ஒரு போர்வீரனாக இதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என ஆவேசம் அடங்காதவராகப் பேசுகிறார், இயக்குநர் கவுதமன்.
- இரா.தமிழ்க்கனல்