Published:Updated:

தொகுதிப் பங்கீடு:காங்கிரஸுக்கு திமுக மிரட்டல்?!

Vikatan Correspondent

சென்னை/புதுடெல்லி, மார்ச் 5, 2011

தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திமுக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ##~~##

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உடனான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது.

கூடுதலான இடங்கள் மட்டுமின்றி, ஆட்சியிலும் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டிருந்தது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. அதேவேளையில், அக்கட்சி அதிக இடங்களுடன் கூடிய நிபந்தனைகள் விதித்தது.

இதுகுறித்து வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி,

காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று நடைபெறவுள்ள திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.க. உரிய முடிவெடுப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் கடைசி அஸ்திரமாக, காங்கிரஸை மிரட்டும் வகையில், மத்திய அமைச்சரவையில் விலகப் போவதாக திமுக திட்டமிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.  

விரைகிறார் பாலு...

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசுவதற்காக, திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

இதில், திமுக தலைமையின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவர்களிடம் டி.ஆர்.பாலு எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.

இதனிடையே, அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே, அதிக இடங்கள் கேட்ட காங்கிரஸை குற்றம்சாட்டி, முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிக்கை வெளியிட்டதும் இங்கே கவனத்துக்குரியது.