வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (26/07/2018)

கடைசி தொடர்பு:16:53 (26/07/2018)

இனி மருத்துவமனை விசிட் இல்லை... பொன்விழா ஏற்பாடுகள் மும்முரம்! - கோபாலபுரத்தில் என்ன நிலவரம்?

கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல்களால் சோர்ந்துகிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி தி.மு.க-வின் தலைவராக பொறுப்பேற்ற 50-வது பொன்விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடும்படி அறிவித்துள்ளார்.

இனி மருத்துவமனை விசிட் இல்லை... பொன்விழா ஏற்பாடுகள் மும்முரம்! - கோபாலபுரத்தில் என்ன நிலவரம்?

டல்நிலை நலிவுற்ற நிலையில் இருக்கும் கருணாநிதி நாளை பொன்விழா கொண்டாட இருப்பது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேரறிஞர் அண்ணாவினால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தி.மு.க. தொடங்கப்பட்டது. தொடக்க விழா மேடையில், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன் உள்பட 26 பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். “கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது; இலட்சியமும் உருப்பெறாது. அந்தக் கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வலிவும் நம்மிடம் இருக்கின்றன” என்று உற்சாகமாக உரையாற்றி தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார் அண்ணா. 

தி.மு.க தொடங்கப்பட்டபோது தலைவர் பதவிக்குப் பதிலாகப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார் அண்ணா. அவர் இருந்தவரை தலைவர் என்ற பதவியே தி.மு.க-வில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், அண்ணா முதல்வராக இருந்தபோது, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் அவர் மறைந்தார். அதைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், முதலமைச்சர் பதவிக்கு மு.கருணாநிதியும், நாவலர் நெடுஞ்செழியனும் போட்டியிட்டனர். எம்.ஜி.ஆர் ஆதரவுடன் கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்றார். அதன்பிறகு, பொதுச்செயலாளர் பதவியை யாருக்கு வழங்குவது என்ற கேள்வியும் எழுந்தது. பிறகு தி.முக-வின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை செய்து தலைவர் பதவிக்கு கருணாநிதியை நியமிக்க முடிவு செய்தனர். அதனடிப்படையில், 27-7-69-ம் தேதியன்று தி.மு.க-வின் முதல் தலைவர் என்ற பதவியை கருணாநிதி ஏற்றார். 

அண்ணா - கருணாநிதி

தி.மு.க தலைவராக கருணாநிதி பதவிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக அந்தப் பதவியில் அவர் மட்டுமே இருந்துவருகிறார். இந்தியாவில் எந்தத் தலைவரும் ஒரு கட்சியின் தலைவராக இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இருந்ததில்லை. அந்தப் பெருமை கருணாநிதிக்கே சேரும். அவர், தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில், `தி.மு.க-வின் ஐம்பெரும் முழக்கங்கள்'  என்ற அறிவிப்பை கருணாநிதி அறிவித்தார்.  

எதிர்க் கட்சியாகத் தி.மு.க இருந்த காலத்திலும், தி.மு.க-வின் தலைவராக இவரின் செயல்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்திலேயே இருந்துள்ளன. ஆட்சியில் இல்லாவிட்டாலும், தான் ஒருகட்சியின் தலைவர் என்ற முறையில் கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிக்கை கொடுப்பது என, தன்னை ஒரு தலைவராக எப்போதும் முன்னிறுத்திக் கொண்டே இருந்தார். குறிப்பாக, இவர் `முரசொலி'யில் உடன்பிறப்புகளுக்கு... என்று எழுதும் கடிதம், பட்டிதொட்டி எங்கும் உள்ள தி.மு.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். கட்சியின் தலைவர் பதவிக்கு, தான் முழுத் தகுதியானவர் என்பதைப் பலமுறை நிரூபித்துக் காட்டியவர் கருணாநிதி. இந்த நிலையில், அவரின் உடல்நிலை இரண்டு ஆண்டுகளாக நலிவுற்றதால், அவரால் முன்புபோல் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியினை வழிநடத்துவதற்காகச் செயல் தலைவர் என்ற பதவி கடந்த ஆண்டு தி.மு.க பொதுக்குழுவில் உருவாக்கப்பட்டது. 

கருணாநிதி - ஸ்டாலின்

செயல் தலைவர் என்ற பதவியில் அப்போது தி.மு.க-வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் செயல் தலைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவியை மாற்றுவதற்காக சமீபத்தில் கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, அவருடைய உடல்நிலையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. அதே நேரம், கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறையான வதந்திகள் தமிழகம் முழுவதும் பரவின. அதன்பிறகு கருணாநிதியை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் கடந்த புதன் கிழமை அன்று சந்தித்த ஸ்டாலின், “கருணாநிதிக்கு காய்ச்சல் மட்டும் உள்ளது எனவும், அவர் நலமுடன் உள்ளார்” எனவும் தெரிவித்தார். கருணாநிதி உடல்நிலை தொடர்பான தற்போதைய நிலவரம் இதுதான்... அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம். செல்வி அருகில் இருந்து கவனித்து வருகிறார். நித்யாவும் உடன் இருகிறார். இனிமேல் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லவேண்டாம், வீட்டில் வைத்தே சிகிச்சையை தொடரலாம என முடிவெடுத்திருக்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள்.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல்களால் சோர்ந்துகிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி தி.மு.க-வின் தலைவராக பொறுப்பேற்ற 50-வது பொன்விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடும்படி  அறிவித்துள்ளார். 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் கருணாநிதி தி.மு.க-வின் தலைவர் பதவியை ஏற்றார். 2018-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி, தலைவர் பதவியை ஏற்ற 50-வது ஆண்டு வருவதால், இந்த அறிவிப்பை ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, தொண்டர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நாளை தி.மு.க-வினர் அனைத்து மாவட்டங்களிலும் பொன்விழா கொண்டாட்டத்தை நடத்தவுள்ளார்கள்.


டிரெண்டிங் @ விகடன்