வெங்கைய நாயுடுவுடன் சந்திப்பு... காங்கிரஸில் அதிருப்தி... மாற்றப்படுகிறாரா திருநாவுக்கரசர்? | TN congress cadre dissatisfied about the meeting of Thirunavukkarasar and Venkaiah Naidu?

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (26/07/2018)

கடைசி தொடர்பு:20:02 (26/07/2018)

வெங்கைய நாயுடுவுடன் சந்திப்பு... காங்கிரஸில் அதிருப்தி... மாற்றப்படுகிறாரா திருநாவுக்கரசர்?

வெங்கைய நாயுடுவுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தது குறித்த கட்டுரை...

வெங்கைய நாயுடுவுடன் சந்திப்பு... காங்கிரஸில் அதிருப்தி... மாற்றப்படுகிறாரா திருநாவுக்கரசர்?

மிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவைத் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்தது, தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பை காங்கிரஸ் நிர்வாகிகளும் சமூக வலைதளங்களும் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், இதைவைத்து தமிழகக் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்கின்றனர், தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகள்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கடந்த 22-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகள், அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தியைத் தனித்தனியாகச் சந்தித்துவருகின்றனர். அதற்காக, தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கடந்த 10 நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் ராகுலைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, ராகுலிடம் தனியாகப் பேச திருநாவுக்கரசர் அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர், `இன்னொரு முறை சந்திக்கலாம்' என்று சொன்னதாகவும், அதனால் திருநாவுக்கரசர் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதற்கிடையில், தன் ஆதரவாளர்கள் சிலருடன் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவை திருநாவுக்கரசர் சந்தித்ததாக தகவல் சொல்லப்படுகிறது. இதற்கு, தமிழகக் காங்கிரஸ் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலர் எஸ்.டி.நெடுஞ்செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ``வெங்கைய நாயுடு, காங்கிரஸையும் ராகுலையும் கடுமையாக விமர்சித்தவர். காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்பாளர். அவரை, எப்படி திருநாவுக்கரசர் சந்திக்கலாம்? இந்தச் சந்திப்பால், அவர் தலைவர் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார். பழைய நண்பர் என்றாலும், தனிப்பட்ட முறையில் வெங்கைய நாயுடுவை எப்படிச் சந்திக்கலாம்? கட்சியின் மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை அழைத்துச் சென்று அவரைச் சந்தித்ததும், அந்தப் புகைப்படத்தை கட்சி சார்பில் வெளியிடுவதும் வேதனையளிக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். 

திருநாவுக்கரசர்

வெங்கைய நாயுடுவுடன் திருநாவுக்கரசர் சந்தித்தது பற்றி சமூக வலைதளங்களும் கருத்துகளைப் பதிவுசெய்துள்ளன. `திருநாவுக்கரசர் காங்கிரஸா, அ.தி.மு.க-வா, பி.ஜே.பி-யா?' என்றும், `மாநிலக் கட்சியான அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராக இருந்த திருநாவுக்கரசர் பதவி உயர்வு பெற்று, தேசியக் கட்சியான பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் ஆகியிருக்கிறார்' என்று அவை விமர்சித்துவருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த பின் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், "தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரா'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த குஷ்பு, "அதை ராகுல் காந்திதான் முடிவுசெய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார். இதனால், விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நிர்வாகிகள் யாருடனும் தலைவர் இணக்கமாகச் செல்வதில்லை; இதனால் அதிருப்தி நிலவுகிறது. பொதுவாக, தலைவர் இப்போது எந்தக் காங்கிரஸ் நண்பர்களிடமும் தொடர்பில் இல்லை. அவர்களுடன் அவருக்கிருந்த தொடர்பு முற்றிலும் குறைந்துவிட்டது. அவர்மீது தற்போது கடுமையான விமர்சனம் எழுந்திருக்கிறது. அவர், தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் கைகோத்துக்கொண்டு அவருக்குத் தோன்றுவதைச் செய்துவருகிறார். இதுகுறித்து பலரும் காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவித்துவருகிறோம். இந்த நிலையில், அவர் வெங்கைய நாயுடுவைச் சந்தித்ததும் பெரும் பிரச்னையாகக் கிளம்பியிருக்கிறது. இதுதவிர, அனைவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதனால், பலரும் ஒற்றுமையின்றிச் செயல்படுகிறார்கள். இது, தற்போதுதான் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம்'' என்றனர். 

மாற்றத்தை விரும்பத் தயாராகிவிட்டனர் மறைமுக காங்கிரஸ் நிர்வாகிகள்!    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்