பெட்ரோல் குண்டுகளால் தினகரனைப் பதறவைத்த `புல்லட்’ பரிமளம் யார்? | Who is kancheepuram Bullet parimalam?

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (31/07/2018)

கடைசி தொடர்பு:16:45 (31/07/2018)

பெட்ரோல் குண்டுகளால் தினகரனைப் பதறவைத்த `புல்லட்’ பரிமளம் யார்?

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த `புல்லட்’ பரிமளம் என்பவர் கடந்த ஞாயிறு மதியம் டிடிவி தினகரன் வீட்டுக்கு முன்பு தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றார்.

பெட்ரோல் குண்டுகளால் தினகரனைப் பதறவைத்த `புல்லட்’ பரிமளம் யார்?

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் `புல்லட்’ பரிமளம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் காஞ்சிபுரம் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இவரை, ஜூலை 27-ம் தேதி கட்சியிலிருந்து நீக்கி, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நடவடிக்கை எடுத்தார். மேலும் பரிமளம் வகித்த பதவிக்குப் புதிய பொறுப்பாளரையும் நியமித்தார். இதனால் ஆத்திரமடைந்த `புல்லட்' பரிமளம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டு முன்பு, தன்னுடைய காரை நிறுத்திவிட்டு தினகரனைப் பார்க்க அவருடைய வீட்டுக்குள் நுழைய முயன்றார். ஆனால், தினகரனின் கார் டிரைவர் பாண்டித்துரை உள்ளிட்டோர் பரிமளத்தை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறிய `புல்லட்' பரிமளம் தன் காரில் தயாராக வைத்திருந்த தினகரனின் உருவ பொம்மையை, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, காரில் இருந்த பெட்ரோல் கேனில் தீ பரவியது. 

இதனால் தினகரனின் கார் டிரைவர் உள்ளிட்ட நான்குபேர் தீக்காயமடைந்தனர். பெட்ரோல் பற்றி எரிந்த சத்தம் கேட்டு, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டின் முன் திரள ஆரம்பித்தனர். பரிமளத்துக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட `புல்லட்' பரிமளம் அங்கிருந்து ஓட்டமெடுத்தார். தகவலறிந்து வந்த அடையாறு காவல்துறையினர், பரிமளத்தின் கார் டிரைவரை கைது செய்தனர். பின்னர், தலைமறைவான புல்லட் பரிமளத்தையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

புல்லட் பரிமளம், தினகரன் ஆதரவாளர்

விசாரணையின்போது பரிமளம், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்காக நான் இதுவரை சுமார் 1 கோடி ரூபாய்வரை செலவு செய்துள்ளேன். கட்சிக்காகப் பாடுபட்ட என்னைத் திடீரென்று கட்சியிலிருந்து தினகரன் நீக்கிவிட்டார். அதற்கு விளக்கம் கேட்பதற்காகவே அடையாறில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்தேன். அப்போது, தினகரனின் கட்-அவுட் மற்றும் துண்டு பிரசுரங்களைக் கொண்டு வந்தேன். அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவதற்காக, காரில் பெட்ரோலும் வைத்திருந்தேன். தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, பெட்ரோல் கேனிலும் எதிர்பாராமல் தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டுவிட்டது" காவல்துறையினரிடம் தெரிவித்தார். 

புல்லட் பரிமளம் குறித்த சர்ச்சை என்பது, அவர் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த அ.தி.மு.க-வுக்கும் ஒன்றும் புதிதல்ல. அவரைப் பற்றி தெரிந்துகொள்ள, அவரின் கடந்த கால அரசியல் வரலாற்றைப் பார்ப்போம். 

யார் இந்த `புல்லட்’ பரிமளம்?

தி.மு.க-விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க-வை ஆரம்பித்த காலத்திலிருந்து, பரிமளத்தின் அப்பா குப்புசாமி அக்கட்சியில் இருக்கிறார். அவர் புல்லட் வைத்திருந்ததால் `புல்லட்’ குப்பன் என்று அவரை அடைமொழியோடு அ.தி.மு.க-வினர் அழைப்பார்கள். ஆரம்ப காலத்தில் அப்பாவைப்போல பரிமளமும் புல்லட் வைத்திருந்ததால் `புல்லட்’ என்பது இவருக்கும் அடைமொழியாகிவிட்டது. `புல்லட்’ பரிமளம் என்றாலே கட்சியில் சலசலப்புக்கும், அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு எதைச் செய்தாலும், அதில் சர்ச்சை இல்லாமல் இருக்காது. அந்த சர்ச்சையே அவருக்கு விளம்பரமாக அமைந்து விடும். 

``தீர்ப்புக்கு முன்பே அம்மா விடுதலை!"

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் என்ன நடக்குமோ எனத் தமிழகமே பதற்றத்தில் இருந்தது. `அம்மா வழக்கிலிருந்து விடுதலை. அம்மாவை நிரபராதி என்று நீதியரசர் தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை காஞ்சிபுரத்தில் வைத்து பரபரப்பைக் கிளப்பியவர் `புல்லட்' பரிமளம். கூடுதலாக ‘அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறைசென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன்…’ என்று டெரராக இருந்த வாசகங்கள் கட்சியினரைக் கலங்கடித்தது. இது வாட்ஸ்அப்பில் வைரலானதால் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, அந்த பேனரைச் சுருட்டி வைத்துக் கொண்டார் புல்லட். ``இது நான் சொன்னது இல்லை. என்னோட கனவில் வந்த ஆதிகேசவ அம்பாள் சொன்னது. சொத்துக் குவிப்பு வழக்கில், அம்மாவுக்கு நீதிபதி விடுதலை கொடுப்பது போன்று, எனக்குக் கனவு வந்தது. கனவுல வந்ததை பேனராக ரெடி செய்து ரயில்வே நிலையம் அருகில் மக்கள் நடமாடும் பகுதியில் அதிகாலையிலேயே வைத்து விட்டேன்" என அதற்கு விளக்கம் கொடுத்தார். இந்த பேனர் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் சர்ச்கை, புல்லட் பரிமளம்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி பேனர்!

அதுபோல், 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே, காஞ்சிபுரம் அ.தி.மு.க எம்.பி. வேட்பாளர் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைத்துப் பரபரப்புக் கிளப்பினார் பரிமளம். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. ``அது என்னுடைய கான்பிடன்ட்ல வெச்சது. ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு 25 ஆயிரம் ஓட்டுகள் என்ற கணக்கில் அந்த பேனரை வைத்தேன். தேர்தல் முடிவில் என்னுடைய கணக்குப்படி சுமார் ஐந்தாயிரம் ஓட்டுகள்தாம் வித்தியாசம் வந்தது. அதைக் கணக்கிட்டு பேனர் வைத்தேன்" என அதற்கும் விளக்கம் கொடுத்தார் புல்லட் பரிமளம்.

டெல்லியை அதிர வைத்த சங்கராச்சாரியார் பேனர்!

சங்கராச்சாரியாரை காவல்துறையினர் கைதுசெய்த போது, 150 அடி நீளம், 12 அடி அகலத்தில் பேனர் வைத்தார். அதில் விலங்கு மாட்டப்பட்ட சங்கராச்சாரியார், ஜெயலலிதா முன்பு நிற்பதுபோல இருந்தது. எல்லாப் பத்திரிகையிலும் வந்ததால், டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்களும் அப்போது இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். `இதுபோன்ற பேனர் வைத்தால் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்காது' எனக் கட்சியில் உள்ளவர்கள் வற்புறுத்தியதால் பின்னர் அந்த பேனரை அகற்றினார் புல்லட் பரிமளம்.

புல்லட் பரிமளம் பேனர்

தெறிக்கவிட்ட சுவர் விளம்பரங்கள்!

பேனர் கலாசாரம் வரும் முன்பே `புல்லட்' பரிமளத்தின் சுவர் விளம்பரங்கள், காஞ்சிபுரத்தைத் தெறிக்க விட்டிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் என்கவுன்டர் அதிகமாக நடைபெற்ற காலகட்டத்தில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடிகளை போலீஸ் சுடுவது போலவும், ரத்தம் தெறிப்பது போலவும் காட்சிகளுடன் கூடிய சுவர் விளம்பரங்களை வரைந்து அதகளப்படுத்தினார். வீரப்பன், வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. வெங்கடேச பண்ணையார் படத்தை அகற்றச் சொல்லி பல்வேறு நாடார் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

கோணிப் பைகளில் சாதனைகள்!

டிஜிட்டல் பேனர் வரத் தொடங்கிய காலகட்டத்தில் 350 அடி நீள பேனர்கள் வைப்பார். இதனால் கட்சிக்குள்ளேயே புல்லட் பரிமளத்துக்கு  எதிராகச் சலசலப்பு கிளம்பிவிடும். தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் பேனர் வைக்கும் புல்லட் பரிமளம், தன்னுடைய சாதனைகளை வீட்டில் சாக்குப்பைகளில் கட்டி வைத்துள்ளார். இதுதான் அவரின் சொத்தாக நினைக்கிறார். காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆருக்குப் பெரிய சிலை இல்லை என்பதால் வீட்டுக்கு வெளியே ஒரு சிலையை வைத்துள்ளார். அதுபோல ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு எதிரே ஜெயலலிதாவுக்குச் சிலைவடித்திருக்கிறார் `புல்லட்' பரிமளம்.

புல்லட் பரிமளம் காஞ்சிபுரம்

கட்சி மாறியும், காட்சிகள் மாறவில்லை!

அ.தி.மு.க-வில் இருந்தபோது `புல்லட்' பரிமளத்தின் மீது போயஸ்கார்டனுக்கு அடிக்கடி புகார்கள் பறந்து கொண்டிருந்தன. இதனால் கட்சியிலிருந்து மூன்றுமுறை அவர் நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணியில் சேர்ந்தார். ஆனால், அவர் சர்ச்சையானவர் என தினகரனிடம் சொல்லியிருக்கிறார்கள் சிலர். பல எச்சரிக்கைகளோடு புல்லட் பரிமளத்தைக் கட்சியில் இணைத்துப் பொறுப்பு வழங்கினார் தினகரன். தனது முரட்டுத்தனத்தை மாற்றிக் கொள்ளாத பரிமளம், தொடர்ந்து கட்சிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தார். இவர்மீது அடுக்கடுக்காகப் புகார்கள் வந்ததையடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார் தினகரன். தற்போது எந்தக் கட்சியிலும் இல்லாத `புல்லட்’ பரிமளத்தை அ.தி.மு.கவினரும் கட்சிக்குள் சேர்க்க விரும்பவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்