வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (01/08/2018)

கடைசி தொடர்பு:13:35 (01/08/2018)

‘உருளைக்கிழங்கு வேறு; அதன் சிப்ஸ் வேறு’ - பா.ஜ.க குறித்து மம்தா சொன்ன கருத்து

'உருளைக்கிழங்கு வேறு; அதன் சிப்ஸ் வேறு. அதேபோல, பா.ஜ.க-விலும் நல்ல தலைவர்கள் உள்ளனர்' என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மம்தா பானர்ஜி

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டாட்சி முன்னணி என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். வரும் ஜனவரி 2019-ல், கொல்கத்தாவில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதில், பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்தக் கூட்டணியில், அனைத்துக் கட்சிகளையும் இணைக்கும் தீவிரப் பணிகளில் தற்போது மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உட்பட பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, ‘பா.ஜ.க-வுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டாட்சி முன்னணியில் அனைத்துக் கட்சிகளையும் இணைப்பதற்காகப் பல தலைவர்களைச் சந்தித்து, தனது மாபெரும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்துவருகிறேன். நம் நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை. அது, வரும் 2019-ல் நிறைவேற உள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க மக்களை பிளவுபடுத்தும் அரசியல் செய்யலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் அது முடியாது. ஏனெனில், நாங்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். உருளைக்கிழங்கு வேறு, அதன்மூலம் தயாரிக்கப்படும் சிப்ஸ் வேறு. அதேபோல, பா.ஜ.க-விலும், சுஸ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் போன்ற நல்ல தலைவர்களும் இருக்கின்றனர். நான் பா.ஜ.க மீது அதிருப்தி அடைந்துள்ள பல பா.ஜ.க தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களையும் எனது பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன். நான் மிகவும் சாதாரணமானவள் அல்ல. வன்முறைகளில் ஈடுபடும் மக்கள் மற்றும் அவர்களைத் தூண்டுபவர்களை மன்னிக்கவே முடியாது” எனக் கூறினார்.