Published:Updated:

கூட்டணி முறிந்தது... மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகல்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவு

Vikatan Correspondent
கூட்டணி முறிந்தது... மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகல்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவு

சென்னை, மார்ச் 5,2011

மத்திய அமைச்சரவையில் இருந்து
விலகுவது என தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இன்று அதிரடி முடிவு எடுக்கப்பட்டது .

முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பிரச்னைகள் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிந்தது.

இந்தத் தேர்தலை காங்கிரஸைத் தவிர்த்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளுடனான கூட்டணியுடன் சந்திப்பது என திமுக முடிவு செய்துள்ளது.

எனவே, தமிழகத் தேர்தலில் பீகாரைப் போலவே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலை இப்போதைக்கு ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உடனான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. ##~~##

கூடுதலான இடங்கள் மட்டுமின்றி, ஆட்சியிலும் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டிருந்தது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. அதேவேளையில், அக்கட்சி அதிக இடங்களுடன் கூடிய நிபந்தனைகள் விதித்தது.

இதுகுறித்து வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக தீர்மானம் விவரம்..

இதையடுத்து, கூட்டணியில் நீடிப்பதா என்பது குறித்து முடிவெடுக்க, கருணாநிதி தலைமையிலான திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று மாலை கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் நியாயமற்ற வகையில் இருந்ததால் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுவதாகவும், திமுக மத்திய அமைச்சர்கள் 6 பேரும் பதவி விலகுவார்கள். எனினும்,  மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுக்க போவதாகவும் திமுகவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக தொடர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை" என்று அந்தத் தீர்மானத்தில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.