Published:Updated:

திமுக துணிச்சலான முடிவு: திருமாவளவன் வரவேற்பு

சென்னை, மார்ச்,5,2011

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து விலகுவது என திமுக எடுத்த துணிச்சலான முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுக எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவால் அரசியல் அரங்கில் முதல்வர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்.
 
இந்த முடிவு தி.மு.க. கூட்டணிக்கு எந்த வகையிலும் நட்டத்தை ஏற்படுத்தாது.  கூட்டணி கட்சியின் மனம் நோகாத வகையில் மிகுந்த பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் தாராளமாக விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் நயத்தக்க நாகரிக அணுகுமுறைகளைக் கொண்டவர் முதல்வர்.

அந்த வகையில் தற்போதைய நெருக்கடி நிலையிலும்கூட பிரச்னைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு நல்குவோம் என முதல்வர் முடிவெடுத்திருப்பது அவரது அரசியல் நாகரிகத்தை உறுதிப்படுத்துகிறது. 

இந்த முடிவால் தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சியினரும் இரு மடங்கு வீரியத்தோடு தேர்தல் பணியாற்றுகின்ற உந்துதலைப் பெற்றுள்ளனர்.

எனவே தி.மு.க. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெறும். மீண்டும் அவரே முதல்வர் ஆவார். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.கவோடு இணைந்து செயலாற்றும்," என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.