Published:Updated:

கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!

"ஆளும் திறமை இடது மூளை... அவரின் காவியமும், கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்"

கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!
கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!

லகம் வியந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு சுவாரசியமானத் தகவல் உண்டு. அவரது மூளையை ஆய்வு செய்த தாமஸ் ஹார்வி என்ற மருத்துவர் உலகில் வேறு எவருக்கும் இல்லாத அளவிலான தொடர்பு நரம்புகள் அவரது மூளையில் அடர்த்தியாக இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் இயற்பியலில் எவராலும் போட்டிபோட முடியாதவர் என்பதால் ஐன்ஸ்டீனின் இடது மூளையின் செயல்பாடுகள் அதிவேகமானதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்ததாகவும் மூளை மடிப்புகள் அவருக்கு அதிகமாக இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் பெற்றிருந்த மாபெரும் சிந்தனையாளனின் மூளைப்பகுதி அப்படி இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலைசிறந்த சிந்தனையாளர்கள், ராஜதந்திரிகளின் மூளை இதுபோன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவது உண்டு. ரஷ்யப் புரட்சியாளர் லெனின், மேற்கு வங்கத்தின் மார்க்சியவாதி ஜோதிபாசு உள்ளிட்டோர் இதுபோன்றவர்களின் அடங்குவர்.

இவர்களின் வரிசையில் இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி எனலாம். "ஆளும் திறமை இடது மூளை... அவரின் காவியமும், கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்" என்று குறிப்பிட்டிருப்பார் அவரின் நெருங்கிய நண்பரான நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி.

1969-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த சி.என். அண்ணாதுரை, புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து அக்கட்சியின் அடுத்த சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உண்டானது. நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கருணாநிதிக்குமான பனிப்போர் காலம் அது. 'போட்டிவழியே தலைவரைத் தேர்ந்தெடுப்போம்' என்கிற நிலைப்பாட்டை எடுத்தார் நெடுஞ்செழியன். கட்சியினர் இருவேறு தரப்பாகப் பிரிந்து இருவருக்கும் ஆதரவு அளித்தனர். கருணாநிதியை ஒருதரப்பும், நெடுஞ்செழியனை மற்றொரு தரப்பும் முன்மொழிந்தார்கள். கருணாநிதிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் உருவான நிலையில் நெடுஞ்செழியன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் யாரைச் சட்டமன்றக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்னும் சிக்கலான சூழல் உருவானது. அப்படிப்பட்ட சூழலில்தான் பெரியாரைச் சந்திக்கச் சென்றார் கருணாநிதி. ஆனால், அதற்கு முன்பே கருணாநிதியை சட்டமன்றக் குழுத்தலைவராகப் பரிந்துரைத்த அறிக்கை விடுதலை இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'சட்டமன்றக் குழுத்தலைவர் பதவி கருணாநிதிக்கு' என்று முடிவானதை அடுத்து நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. 'கட்சியில் மூத்த உறுப்பினர் என்கிற அடிப்படையில் நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவேண்டும்' என்று கருணாநிதிதான் முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கருணாநிதியுடனான கருத்து முரண்பாட்டால் அதனை மறுத்தார் நெடுஞ்செழியன். அந்த வருடம் அண்ணாதுரையின் நினைவுநாள் கூட்டம், கருணாநிதி தலைமையில் சென்னை தியாகராய நகரிலும், நெடுஞ்செழியன் தலைமையில் திருவல்லிக்கேணி தொகுதியிலும் என இருவேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அண்ணாதுரை உருவாக்கிய கட்சியில் அதற்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று சுதாரித்துக் கொண்டார் கருணாநிதி.  

இருவருக்குமிடையே தொடர்ந்த கருத்து வேறுபாடுகளைக் களைய நெடுஞ்செழியனை கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க அழைப்பு விடுத்தார். அதையடுத்து, சென்னையில் இருந்த ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை 27 அன்று, தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆனார் நெடுஞ்செழியன். கருத்து முரண்பாடு ஏற்பட்ட கருணாநிதியைக் கட்சியின் தலைவராக முன்மொழிந்தார் நெடுஞ்செழியன். இருவரும் அதே மேடையில் கட்டியணைத்துக் கொண்டனர். கட்சியின் ஒற்றுமைக்காக, கருணாநிதி எடுத்த முதல் நடவடிக்கை அது.

கழகத்துக்கான தந்திரங்கள்...!

ஒரு நல்ல தலைமையின் கட்டுக்கோப்பில் இயங்கும் கட்சி, தலைமை இல்லாத காலங்களிலோ அல்லது தலைமையின் செயல்பாடுகள் குறைந்த காலங்களிலோ பெரும் இக்கட்டுகளைச் சந்திக்கும். தமிழகத்தின் நடப்பு ஆட்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் அதற்கான சிறந்த உதாரணம். திராவிட முன்னேற்றக் கழகம், அப்படியான உட்கட்சிப் பூசல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அண்ணாதுரை தலைமையில் திருச்சியில் கட்சியின் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், உடல்நிலை நலிவுற்றிருந்ததால் தனக்குப் பதிலாக கருணாநிதியைத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. கூட்டம் நடத்தப்பட்டு, திருச்சியில் 132 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. கட்சியில் இருந்து ஒருவரும் வெளியேறிவிடக்கூடாது என்கிற அண்ணாவின் அதே எச்சரிக்கைப் போக்கு கருணாநிதியிடமும் இருந்தது. சிந்தனைகள் ஒரே அலைவரிசையில் இருந்தால் மட்டுமே இயக்கமாக வெற்றிகரமாகச் செயல்படுவது சாத்தியம் என்பதற்கு இந்தச் செயல்பாடு ஒரு சிறந்த உதாரணம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளை உரிய நபர்களிடம் ஒப்படைப்பதில்கூட ராஜதந்திரியாகவே இருந்தார் கருணாநிதி. எம்.ஜி.ஆரைக் கட்சியின் பொருளாளராக நியமித்ததும் அந்த அடிப்படையில்தான். மக்களிடையே அடையாளம் பெற்ற ஒருவரைக் கட்சியில் உயர் பதவியில் அமரவைப்பது கட்சிக்கு வலுசேர்க்கும் என்பது அவரது எண்ணம். 

மன்னை நாராயணசாமிக்கும், கோ.சி. மணிக்குமிடையே பிரச்னை ஏற்பட்டபோதும் கட்சியின் இணக்கத்திற்காக கருணாநிதி, அந்தப் பிரச்னையைச் சிறந்த முறையில் கையாண்டார். தன் பயணங்களில் இருவரையும் ஒன்றாகக் காரில் ஏற்றிக்கொள்வார். இருவருக்கிடையேயும் முரண்பாடு, கோஷ்டிப் பூசல்கள் எனப் பல பிரச்னைகள் இருந்தன. பிரச்னைகள் இருந்தது என்பது கருணாநிதிக்கும் தெரியும். ஆனால், இருவரையும் சரிசமமாகவே நடத்துவார். அவர்களை அப்படி நடத்தினால் மட்டும்தான் தொண்டர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக நடந்ததாக இருக்கும் என்பது கருணாநிதியின் நிலைப்பாடு. கட்சியில் எங்கே, யாரை, எப்படி அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு நல்ல தலைமைக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

கருணாநிதியின் ஆரோக்கிய அரசியல்...!

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஜானகி மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டபோது கருணாநிதியின் ஆதரவைக் கோரினார் ஜானகி. ஆனால், கருணாநிதி மறுத்தார். குடும்பப் பிரச்னைகளைக் கட்சிப் பிரச்னை ஆக்குவதும், அதில் மூன்றாம் நபரின் ஆதரவைக் கோருவதும் தவறு என்பது அவருடைய நிலைப்பாடு. ஒருவேளை ஜானகிக்கு ஆதரவளித்திருந்தால் ஜெயலலிதா எனும் சக்தி உருவாகியிருக்க முடியாது. ஆனால், ஆரோக்கியமான அரசியலை விரும்பிய கருணாநிதி அதனைத் தவிர்த்தார். கொண்ட கொள்கையில் என்றும் தவறாது இருந்தது, அவரது ஆரோக்கிய அரசியல். மத்தியில்  மதச்சார்பின்மையைக் கோரியவர், மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே சமூக நீதிக்காகக் குரல்கொடுத்தார். அதற்கு உதாரணம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்  கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் பத்து தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தார். 

மத்திய ஆட்சிகளுடனான போக்கு...!

பொதுவாக ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன், மூத்தத் தலைவர்கள் பத்து பேரிடம் விவாதிப்பார் கருணாநிதி. அனைத்தையும் கேட்டுக் கொண்டு, பதினோன்றாவதாகப் புதிய யோசனை ஒன்றைச் சொல்வார். 'எவன் ஒருவன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகித்து, அதற்கு ஏற்றாற்போல கழகத்தை வழிநடத்துபவனோ அவனே நல்ல தலைவன்' என்பார். கருணாநிதியின் கூட்டணி நிலைப்பாடுகளும் மத்திய ஆட்சி தொடர்பான அவரது சிந்தனைகளும் அதையொட்டியே இருந்தன. டெல்லி மத்திய அரசிலும், அது தொடர்பான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பாலான செய்திகளிலும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மட்டுமே தெரிவார். 'பி.ஜே.பி-யுடன் ஏன் கூட்டணி?' என்பது தொடர்பான விவாதத்தில் மட்டும் அவரே முன்வந்து விளக்கம் அளித்தார். 'பொதுநலனை மீறிச் செயல்பட்டால் உங்கள் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன்' என்கிற பொது நோக்கம் கொண்ட அறிவிப்பை விடுத்த பிறகே, பி.ஜே.பி. கூட்டணியில் இணைந்தார் கருணாநிதி. மத்தியில் இருக்கும் கட்சியை எந்தவொரு மாநிலக் கட்சியும் தனது விரலசைவில் ஆட்டிவைத்ததாகச் சரித்திரம் இல்லை. 'தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை' என்று சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அதே சிறுபான்மையினருக்கு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்ததற்கு கருணாநிதி பலவகைகளில் காரணமாக இருந்தார்.

கேள்வி: "நீங்கள் எழுதுவதையும், சிந்திப்பதையும் நிறுத்திக் கொண்டால் என்னவாகும்?”

கருணாநிதியின் பதில்: "உயிரே போய்விடும்". 

விகடனுக்கு ஒருமுறை அவர் அளித்த பேட்டியில் இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார். 

மத்திய அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கம்; மாநில அரசுகளுக்கான ஆட்சியியல் முன்னோடி; அறிவாலயத்தின் அறிவாயுதம் தற்போது சிந்திப்பதை நிறுத்திவிட்டது. அவர் சொன்னதுபோலவே நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். இந்த ஓய்வில் அமைதி நிலைக்கட்டும்!