`அந்த நாள்களை எண்ணி வியக்கிறேன்' - கருணாநிதிக்கு விஜயகாந்த் புகழாரம் | vijayakanth issued a Mourning statement of karunanidhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (09/08/2018)

கடைசி தொடர்பு:13:05 (09/08/2018)

`அந்த நாள்களை எண்ணி வியக்கிறேன்' - கருணாநிதிக்கு விஜயகாந்த் புகழாரம்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விஜயகாந்த்

வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த இவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். 

உடல் நலம் பாதிப்பால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் , கருணாநிதியின் இறப்புச் செய்தியை அறிந்த உடன் நேற்று காலை அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீடியோ ஒன்றை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கலைஞரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டு தான் கருணாநிதியுடன் இருந்த நினைவுகளைப் பகிரும்போது தன்னையறியாமல் வீடியோவிலேயே கதறி அழுதுவிட்டார். இந்த வீடியோ விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமல்லாது அனைவரது மனதையும் கனக்கச்செய்தது. நேற்று சமூகவலைதளங்களில் இவரின் வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில், இன்று கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து கவிதை நடையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அதில், ``உலகமே உங்களைக் கலைஞர் என்று அழைத்தாலும் உணர்வுபூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்துப் பழகிய நாள்களை எண்ணி வியக்கிறேன். தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு என்ற அர்த்தத்தை உழைப்பு என்று மாற்றியவர். அந்தி சாயும்போது சூரியன் மறைவது இயல்பு, ஆனால், கடந்த 7-ம் தேதி இரு சூரியன்களும் ஒருசேர மறைந்தது என்பதை நினைக்கும்போது இவ்வுலகமே இருட்டாகியது போன்ற உணர்வைத் தந்தது. உங்கள் உடல் இவ்வுலகை விட்டுப் போனாலும் உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடன் இருக்கும். இப்படிக்கு, உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்” என தெரிவித்திருந்தார். கருணாநிதி, விஜயகாந்தை எப்போதும் விஜி என்றே அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close