தி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க தலைவராக ஸ்டாலின்! - சவால்விடும் 5 விஷயங்கள்

தி.மு.க தலைவர் பதவிக்குத் தற்போது இருக்கும் அதிகாரங்களோடு சேர்த்து, பொதுச் செயலாளரிடம் இருக்கும் சில அதிகாரங்களையும் இணைக்க இருக்கிறார் ஸ்டாலின். இதன்மூலம், அதிக அதிகாரங்களோடுகூடிய தலைவர் பதவியில் அவர் அமர இருக்கிறார்.

தி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க தலைவராக ஸ்டாலின்! - சவால்விடும் 5 விஷயங்கள்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, கழகத்தின் பொதுக்குழுவுக்காகக் காத்திருக்கின்றனர் கட்சியின் சீனியர்கள். 'தலைவர் பதவிக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட இருக்கிறார் ஸ்டாலின். அடுத்தகட்டப் பதவிகளுக்காகக் குடும்ப உறவுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை சமாளிப்பதில்தான் ஸ்டாலினின் திறமை அடங்கியிருக்கிறது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

கருணாநிதி

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடல்நலமில்லாமல் கவலைக்கிடமாக இருந்த காலகட்டத்தில், வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி தி.மு.க-வின் பொதுக்குழு நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. அ.தி.மு.க-வின் கட்சி விழாக்கள் நடக்கும் வானகரம் மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்தவும் திட்டமிட்டது தி.மு.க தலைமை. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் பொதுக்குழு தேதி தள்ளிப்போயிருக்கிறது. தற்போது கருணாநிதியின் மறைவையடுத்து, தி.மு.க-வின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் ஸ்டாலின். 

``50 ஆண்டுகளாகக் கருணாநிதி கட்டிக் காத்த கழகத்தின் மரபு, மாண்பு, கண்ணியம் ஆகியவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோக வேண்டிய மாபெரும் கடமை, ஸ்டாலினிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாளப்போகிறார் என்பதில்தான் கழகத்தின் எதிர்காலம் இருக்கிறது" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளையும் ஸ்டாலின் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும் பட்டியலிட்டார். 

கனிமொழி1. தி.மு.க தலைவர் பதவிக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களோடு சேர்த்து, பொதுச் செயலாளரிடம் இருக்கும் சில அதிகாரங்களையும் இணைக்க இருக்கிறார் ஸ்டாலின். இதன்மூலம், அதிக அதிகாரங்களோடுகூடிய தலைவர் பதவியில் அவர் அமர இருக்கிறார். இதையடுத்து, அவரிடம் இருக்கும் பொருளாளர் பதவி யாருக்குச் சென்று சேரும் எனப் பெரும் லாபி நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் பதவிக்கு எ.வ.வேலு, பொன்முடி, நேரு எனப் பலரும் போட்டிப்போடுகின்றனர். அதேநேரம் கனிமொழி தரப்பினரும், 'தென்மாவட்டங்களில் கனிமொழியின் செல்வாக்கை மனதில் வைத்துதான், தன் கட்சியைச் சேர்ந்த முத்துக்கருப்பன், விஜிலா, சின்னத்துரை உட்பட நான்கு பேருக்கு ஒரே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தார் ஜெயலிலதா. மகளிர் அணித் தலைவி பொறுப்பிலிருந்து பொருளாளர் பதவிக்கு அவரை உயர்த்த வேண்டும். ஒரு பெண் தலைவராகவும் அவர் இருக்கிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கட்சியின் வளர்ச்சிக்கும் நல்லது. அண்ணாவுக்கு கருணாநிதி தளபதியாக இருந்ததுபோல, செயல் தலைவர் ஸ்டாலினுக்குத் தளபதியாகக் கனிமொழி இருப்பார். அவரால் எந்தவிதச் சிக்கல்களும் வராது' எனக் கூறியுள்ளனர். கனிமொழியும், 'அண்ணனாகப் பார்த்து எதைச் செய்தாலும் சரி' என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயர் பதவியில் இருந்தால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும்' என நினைக்கிறார் ஸ்டாலின். எனவே, பொருளாளர் பதவிக்கு அவருக்கு மிகவும் வேண்டிய விசுவாசமான சீனியர்கள் முன்னிலைப்படுத்தப்படலாம். 

2. பேராசிரியர் க.அன்பழகன் இருக்கும் காலம் வரையில், 'பொதுச் செயலாளர் பதவியில் அவர் தொடரட்டும்' என்ற மனநிலையில் இருந்தார் ஸ்டாலின். இப்போது அவரும் உடல்நலமில்லாமல் இருப்பதால், அந்தப் பதவிக்கு யார் வருவார் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. திண்டுக்கல் ஐ.பெரியாசாமியை முன்னிறுத்தினால், துரைமுருகன் முரண்டு பிடிப்பார் என்பதால், அவரைச் சமாளிப்பது குறித்தும் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அனைத்து வகையிலும் ஐ.பெரியசாமிதான் ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறார். இதைத் துரைமுருகன் ஏற்கவில்லையென்றால், பொதுச் செயலாளர் பதவியை அவருக்கே கொடுக்கும் நிலைக்கு ஸ்டாலின் வருவார். ஆர்.எஸ்.பாரதியும் மறுபுறம் போராடிக்கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டார் செல்வி. இப்போது, அவரே திருவாரூர் தொகுதியில் தனக்கு சீட் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். மு.க.தமிழரசுவின் மகனுக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் பதவியைக் கேட்டு ஒரு குரூப் பேசி வருகிறது. 

 அழகிரி3. இதையெல்லாம்விட, ஸ்டாலினுக்குப் பெரிய சவாலாக இருப்பது அழகிரிதான். அவரைக் கையாள்வதற்கு முரசொலி செல்வம் உட்பட குடும்பத்தில் உள்ள நடுநிலையாளர்களின் ஆலோசனையோடு செயல்படுகிறார் ஸ்டாலின். தற்போது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருக்கிறார் உதயநிதி. இதே அறக்கட்டளையில் தன் மகனையும் உறுப்பினராக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் அழகிரி. கழகத்தில் நிதி தொடர்பான முக்கிய விஷயங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது முரசொலி அறக்கட்டளை. இதில் உறுப்பினராக இடம் பிடித்துவிட்டால், கட்சிக்குள் தன்னுடைய குடும்பமும் அங்கமாக இருப்பதை உறுதி செய்துவிட முடியும் என அவர் நினைக்கிறார். எனவே, இந்த விவகாரத்தை நிதானமாகக் கையாளும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். மேலும், இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவிக்கு உதயநிதியை சிலர் முன்னிறுத்தியபோது, 'அவரை கட்சிக்குள் இப்போது கொண்டு வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். இது அழகிரி தரப்பினருக்குக் கொடுத்த ரெட் சிக்னலாகவே பார்க்க முடிகிறது. 

4. அதேபோல், கட்சி சீனியர்களின் கருத்துகளைக் கேட்பதில் புறம் தள்ளுகிறார் ஸ்டாலின் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அது ஒருவகையில் உண்மைதான். முழுக்க இளைய தலைமுறையை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தாலும், மூத்தவர்களின் கருத்துகளைக் கேட்டுச் செயல்படுவதும் அவசியம். கருணாநிதி இருந்தவரையில், கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்களையும் ஒருங்கிணைத்துக் கூட்டுத் தலைமையாகத்தான் செயல்பட்டு வந்தார். இது வெளியுலகின் பார்வைக்கு தி.மு.க-வை ஒரு ஜனநாயக இயக்கமாகக் கொண்டு சேர்த்தது. மேலும், குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் கருணாநிதி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கருணாநிதியின் முடிவுளைப் பல நேரங்களில் முரசொலி மாறன் கண்டிப்பார், அறிவுறுத்துவார். அதில், கட்சியின் வளர்ச்சிக்கு நன்மை இருக்கிறதா எனவும் அவர் ஆராய்வார். குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் இதே பாணியை ஸ்டாலின் கையாள வேண்டும். 

5. கருணாநிதிக்கு சமாதியை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் மிகுந்த பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்பட்டார் ஸ்டாலின். தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைக்காமல், சட்டரீதியாகவே போராடி வென்றார். இதே பாணியை உள்கட்சி செயல்பாட்டிலும் கடைப்பிடித்தால், கழகத்தின் அஸ்திவாரம் மேலும் பலப்படும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!