Published:Updated:

`` `எப்படி இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டால், அதற்கு கலைஞர் பதில்...’’ - எழுத்தாளர் வேங்கடசாமி

``எப்போது போனாலும் நேரடியாகக் கலைஞரைச் சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன் என்று எண்ணும்போது, அடுத்த பிறவியிலும் கலைஞர்தான் என் நண்பராகப் பிறக்க வேண்டும்'' என்கிறார், அவருடைய ஆரம்பகால நண்பரும் நாவலாசிரியருமான வேங்கடசாமி.

`` `எப்படி இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டால், அதற்கு கலைஞர் பதில்...’’ - எழுத்தாளர் வேங்கடசாமி
`` `எப்படி இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டால், அதற்கு கலைஞர் பதில்...’’ - எழுத்தாளர் வேங்கடசாமி

சேலம் ரகுராம் காலனியில் வசிக்கும் வேங்கடசாமிச் சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவலைகள் பற்றி விரிவாகக் கேட்டோம். ``நான் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த சமயத்தில், `சண்ட மாருதம்' இதழின் ஆசிரியரான கவிஞர் கண்ணதாசனைச் சந்திப்பதற்காக ஒருநாள் மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு, வெள்ளைநிற வேட்டியில் அரைக்கை சட்டையோடு கையில் சூட்கேஸோடு ஓர் இளைஞர் நின்றுகொண்டிருந்தார். அவர், `மாடர்ன் தியேட்டருக்காகப் புதிதாகக் கதை, வசனம் எழுத வந்திருக்கிறார்' என அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டனர். அப்போது, அவரைப் பற்றி எனக்கு எந்த அறிமுகமும் இல்லாததால் கவிஞர் கண்ணதாசனை மட்டும் சந்தித்துவிட்டு வந்துவிட்டேன். 

அடுத்த நாள் ஒரு படத்தின் ஒத்திகை என்பதால், டைரக்டர் கே.சோமு என்னை அழைத்து, நான் கண்ணதாசன் அலுவலகத்தில் பார்த்த அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி, `இவர் பேரு கருணாநிதி. மாடர்ன் தியேட்டருல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கார். இவருக்கு வாடகைக்கு ஒருவீடு இருந்தா பார்த்துச் சொல்லு’ என்றார். அதற்கு கருணாநிதி, ‘டவுனுக்குள்ளேயே கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க சார்’ என்று கேட்டார். இதையடுத்து, சேலம் கோட்டைப் பெருமாள் கோயில் பகுதியில் எங்கள் வீட்டுக்கு எதிரே காலியாக இருந்த ஒரு வீட்டில், 50 ரூபாய் வாடகைக்குக் குடிவைத்தேன்’’ என்கிறார், சற்றே பெருமூச்சு விட்டபடி.

மீண்டும் தொடர்ந்த அவர், ``ஒருசமயம் தஞ்சாவூரில், `மந்திரிகுமாரி' நாடகம் நல்ல வசூலைத் தந்துகொண்டிருந்த வேளை. இதைக் கேள்விப்பட்ட மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம், அதைத் திரைப்படமாக எடுப்பதற்காக அந்த நாடகத்தின் கதையாசிரியரை அழைத்துவரச் சொல்லி மருதகாசியையும், கா.மு.ஷெரிப்பையும் அனுப்பிவைத்தார். அவர்கள்தாம் கலைஞரைச் சேலம் மாடர்ன் தியேட்டருக்குக் கூட்டி வந்தார்கள். அங்குவந்த அவர், பிறகு... நான் காட்டிய வீட்டில் அவருடைய அம்மா அஞ்சுகத்தம்மாள், மனைவி தயாளு அம்மாள், குழந்தை மு.க.முத்து ஆகியோருடன் வசிக்க ஆரம்பித்தார். இதனால் எங்கள் இரண்டு குடும்பமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தது. கலைஞர் வீட்டில் அசைவம் சமைக்கும்போது என்னையும் கூப்பிட்டுச் சாப்பாடு போடுவார்கள். நான் பாதி சாப்பிடும்போது கலைஞர் சாப்பிட்டே முடித்துவிடுவார். `அவன், எப்பவும் இப்படித்தான் வேகமாச் சாப்பிடுவான். நீ பொறுமையாச் சாப்பிடு’ என்று கலைஞரின் அம்மா சொல்வார்கள். குழம்பில் சின்னச் சின்ன துண்டுகளாகக் கறி இருக்கும். அதைச் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். 

கலைஞருக்கு மிகவும் தாராள மனசு. நண்பர்களுக்குச் செலவு செய்வதில் கணக்குப் பார்க்க மாட்டார். அசைவம் சாப்பிட விரும்பினால், உடனே என்னைக் கூப்பிடுவார். இப்போது சேலத்தில் ஓரியன்டல் சக்தி தியேட்டர் இருக்குமிடத்தில் அப்போது நித்தியானந்த பவன் என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்று இருக்கும். அங்கே போய் நானும், கலைஞரும் அடிக்கடி சாப்பிட்டுவிட்டு வருவோம். அவர் சேலத்தில் தங்கியிருந்தபோது விடுமுறை நாள்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் எனப் பல ஊர்களில் நடைபெறும் தி.க. கூட்டங்களுக்குச் சிறப்புப் பேச்சாளராகச் செல்வார். அவரோடு நானும் செல்வேன். மேடை ஏறிவிட்டால் அவருடைய பேச்சில் அனல் பறக்கும்... அதைக் கேட்டு தொண்டர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்கும். கூட்டம் முடிந்ததும் அவரிடம், `எப்படி சார் இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டபடியே வீட்டுக்கு வருவேன். அதற்கு அவருடைய மெளனமே பதிலாக இருக்கும். 

இதற்கிடையே, மாடர்ன் தியேட்டரில் அவர் கதை - வசனம் எழுதிய `மந்திரிகுமாரி' படம் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகும்போது மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில், படத்தின் பெயர் போட்டு போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக, மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில்... மு.கருணாநிதி கதை, வசனத்தில் `மந்திரிகுமாரி’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்தப் படம் கலைஞருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மாதச் சம்பளமாக 500 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார், கலைஞர். அந்தத் தொகை அவருக்கு இரண்டு வாரங்கள்கூடச் செலவழிக்க முடியாததாக இருக்கும். ஆனாலும், அவரை மிக அதிக அளவில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தியது `மந்திரிகுமாரி’ படம். கலைவாணர் என்.எஸ்.கே. தன்னுடைய படத்துக்கு கதை - வசனம் எழுதுவதற்காகக் கலைஞருக்கு 10,000 ரூபாய் கொடுத்தார். பின்னர், சேலத்திலிருந்து சென்னைக்குக் குடிபோனார். அங்கு சென்றபிறகு, நான் மாதந்தோறும் அவர் வீட்டுக்குச் செல்வேன். என்னை அழைத்து அன்புடன் நலம் விசாரிப்பார். பின்பு, அவர் முதல்வர் ஆன பிறகும்கூட என்னுடன் நட்புடனே இருந்தார்.

குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த கல்யாணம் ஒன்றில் கலைஞரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில்கூட என்னைப் பார்த்து கைகொடுத்து நலம் விசாரித்தவர், `நீங்கள் ஜூனியர் விகடனில் எழுதி வரும், `எப்போதோ கேட்ட குரல்’ தொடரைப் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார். அதேபோல், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலபுரம் வீட்டில் அவரை, கவிஞர் வைரமுத்துவுடன் அமர்ந்திருக்கும்போது சந்தித்தேன். அப்போது அவர் வைரமுத்துவிடம், `இவர், என்னோட  நீண்டகால நண்பர். இப்ப ஆன்மீகம் பக்கம் போயிட்டார்’ என்று அறிமுகப்படுத்திவைத்தார். அவருடைய நினைவையும், அவர் என்மீது கொண்டிருந்த நட்பையும் கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். ஒருவர், உயர்ந்த இடத்துக்குப் போகும்போது உடன்பிறந்தவனையே மறந்துபோகும் இந்தக் காலத்தில் ஒரு நண்பனின் செயலைகூடத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றால், அது கலைஞரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் அவர் இன்றும் பலருக்கும் கலைஞராகவே ஜொலிக்கிறார். அதேபோல், என் வீட்டில் நடக்கும் அனைத்து விஷேசங்களுக்கும் வந்து என்னைக் கெளரவப்படுத்தியிருக்கிறார். சேலத்துக்கு எப்போது வந்தாலும் என்னை அழைத்து தனிமையில் அமர்ந்து நீண்டநேரம் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசுவார். அப்படியான என் நண்பன் கலைஞரைப்போல, ஒரு தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை; இனி பார்க்கவும் முடியாது. எப்போது போனாலும் நேரடியாகக் கலைஞரைச் சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன் என்று எண்ணும்போது அடுத்த பிறவியிலும் கலைஞர் என் நண்பராகப் பிறக்க வேண்டும். இனி என் நண்பன் இல்லாத வீட்டை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது’’ என்று முடித்தபோது அவர் கண்கள் கசியத் தொடங்கின.

இவரைத்தான் பின்னாளில் கருணாநிதி, தன்னுடைய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில், ``சேலம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் வேங்கடசாமி'' என்று குறிப்பிட்டிருந்தார்.