``ஒவ்வொரு பிறந்த நாளிலும் வாழ்த்துவாரே கலைஞர்!’’ - தழுதழுக்கும் சங்கரய்யா

கருணாநிதி மறைவால் தழு தழுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரையா...

``ஒவ்வொரு பிறந்த நாளிலும் வாழ்த்துவாரே கலைஞர்!’’ - தழுதழுக்கும் சங்கரய்யா

றைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, 14 பிரதமர்களுடன் அரசியல் செய்தவர். அரசியல் வாழ்க்கையில் பல தலைவர்களுடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தாலும், சங்கரய்யா போன்ற இளமைக்காலத் தோழர்களை அவர் மறந்ததில்லை. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் கோலோச்சிக்கொண்டிருந்தபோது, பாடல் எழுதுவதற்காக கருணாநிதி அங்கே சென்றார். சேலத்தில் குடியிருக்க அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்த வேங்கடசாமியுடன் கடைசி வரை நட்புகொண்டிருந்தார். முதலமைச்சராக உயர்ந்தபோதும் வேங்கடசாமியுடனான நட்பைத் தொடர்ந்தார். சேலத்துக்குப் போகும்போதெல்லாம் வேங்கடசாமியைச் சந்தித்து பல கதைகள் பேசிவிட்டே சென்னை திரும்புவார். 

கருணாநிதியை இழந்த சங்கரய்யா

இப்படி நட்புகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தவர் கருணாநிதி. கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மீதும் மிகுந்த பற்றுகொண்டிருந்தார். ஆகஸ்ட் 7-ம் தேதியை, சங்கரய்யாவால் மறக்கவே முடியாது. காரணம், அன்றுதான் தன் உயிர் நண்பரை அவர் இழந்தார். 97 வயதாகும் சங்கரய்யா சென்னையில் வசித்தாலும், முதுமை காரணமாக நேரில் வந்து தன் ஆரூயிர் நண்பருக்கு அஞ்சலி செலுத்த இயலவில்லை. இதனால், கருணாநிதி உடல் அடக்க நிகழ்வுகளை, கசிந்தோடும் கண்ணீருக்கிடையே தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியைப் பார்த்தபடி ``சென்று வா நண்பா!'' என்று கை அசைத்து தன் நண்பருக்கு பிரியா விடை அளித்தார்.

என்.சங்கரய்யா, கருணாநிதியைவிட மூன்று வயது மூத்தவர்; மார்க்சிஸ்ட் கட்சியின் ஆணிவேராக இருந்தவர். 1941-ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பிரிட்டிஷ் அரசால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறையில் இவர் அடைக்கப்பட்டபோது காமராஜரும் அந்தச் சிறையில் இருந்தார். தஞ்சை சிறையில் அடைப்பட்டபோது முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுடன் பழக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தாலும் கம்யூனிசம்தான் சங்கரய்யாவுக்கு உயிர் மூச்சு. கருணாநிதியைப் போன்றே கொள்கைப்பிடிப்புடன் பணியாற்றியவர். 

சங்கரய்யாவுக்கும் தி.மு.க-வுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது. 1967-ம் ஆண்டுதான் முதன்முதலில் அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, தமிழகத்தில் திராவிடக் கட்சி அரியணை ஏறியது. இந்தச் சமயத்தில்தான் மதுரையிலிருந்து சங்கரய்யா முதன்முறையாக எம்.எல்.ஏ-வாகி தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அதற்கு முன் 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் மதுரை கிழக்குத் தொகுதியில் சங்கரய்யா போட்டியிட்டுத் தோற்றிருந்தார். அந்த வகையில் அண்ணாதுரையுடன் சேர்ந்து தமிழகச் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்தவர் சங்கரய்யா.

இதே ஆண்டில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். சங்கரய்யாவை அணுகிய கருணாநிதி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு வேண்டினார். இவரும் சிரத்தையெடுத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்களுடன் பேசி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார். 

கருணாநிதியை இழந்த சங்கரய்யா

கருணாநிதி முதலமைச்சரான பிறகும் பல முக்கிய விஷயங்களை சங்கரய்யாவுடன் விவாதிப்பார். கருணாநிதியுடன் இணைந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவது போன்ற விஷயங்களில் கருணாநிதிக்குப் பக்கபலமாக இருந்தார். சுயமரியாதைத் திருமணத்தை ஊக்கப்படுத்த தொடர்ந்து கம்யூனிஸ்ட் பத்திரிகைகளான ஜனசக்தி, தீக்கதிர் நாளிதழ்களில் அவர் எழுதிவந்தார். முதுமை காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கிய அவருக்கு, கருணாநிதியின் மறைவு இடி போன்றதுதான். 

``ஜூலை 15-ம் தேதி, எனக்குப் பிறந்த நாள். அன்றைய நாளில் காலை 6 மணிக்குத் தவறாமல் எனக்கு ஒரு போன் வரும். அது கருணாநிதியிடமிருந்து வரும் போனாகத்தான் இருக்கும். நானே பல நேரத்தில் என் பிறந்த நாளை மறந்துவிடுவேன். ஆனால், அவர் ஒருபோதும் மறந்ததில்லை. அவரின் உடல்நிலை சரியில்லாமல்போன பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை'' என்று தழுதழுக்கிறார் சங்கரய்யா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!