கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, அவற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறிபோயுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பலத்த மழையால் கேரளா முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கேரள மக்களுக்காகப் பிரார்த்திப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கேரளாவில் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரளாவில் உள்ள காங்கிரஸாரும் அண்டைப் பகுதிகளில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த உதவியைக் கேரள மக்களுக்குச் செய்ய வேண்டும். கேரள மக்கள் இந்தக் கடினமான நேரத்திலிருந்து விரைவில் மீண்டுவர இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.