‘திரிணாமுல் காங்கிரஸை வேரோடு அகற்றுவோம்’ - மேற்குவங்கத்தில் அமித் ஷா சூளுரை

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட அமித் ஷா, மம்தா பானர்ஜியை வெளியேற்றுவது தான் எங்களின் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் அமித் ஷா

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடந்த சில காலங்களாக கடுமையான மோதல் நிலவிவருகிறது. மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அசாம் தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான வாதம் நிலவியது. நேற்று கொல்கத்தா வந்த அமித் ஷாவை வரவேற்று நகர் முழுவதும் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இடையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோ பேக் அமித்ஷா என்ற பதாகைகளை வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்நிலையில், பாஜக சார்பில் நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “ நாம் அனைவரும் இங்குக் கூடியிருப்பது மம்தா பானர்ஜி மற்றும் அவரது தலைமையிலான ஆட்சியை வேரோடு அகற்றுவதற்காகத்தான். அசாமில் தங்கியுள்ள வங்க தேச மக்களை வெளியேற்றினால் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் அதற்காகத் தான் அவர்களை வெளியேற்ற மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாடு தான் முக்கியம். தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். மேற்குவங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது” என மிகவும் கடுமையாக பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!