வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (13/08/2018)

கடைசி தொடர்பு:16:05 (13/08/2018)

`பிரான்ஸ் அதிபரிடம் பேசினேன்; நிர்மலா சீதாராமன் பொய் சொல்லிவிட்டார்..! - ராகுல் காந்தி பளீச்

கர்நாடக விவசாயக் கடன்களைத் தைரியம் இருந்தால் தள்ளுபடி செய்யுங்கள் என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். 

ராகுல் காந்தி

அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலம் பிடார் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, மோடி அரசைக் கடுமையாகச் சாடினார். ரபேல் விமானம் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பினார். 

கூட்டத்தில் பேசிய ராகுல், 'இந்திய இளைஞர்களிடம் நிர்மலா சீதாராமன் பொய் கூறிவிட்டார். ரபேல் விமானம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் என்றும் அதன் விலை பற்றி வெளியில் கூற முடியாது எனவும் தெரிவித்தார். ஆனால், இது உண்மையா என நான் பிரான்ஸ் அதிபரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என மறுத்துள்ளார். இந்திய அரசு வேண்டுமானால் ரபேல் ஒப்பந்தம் குறித்து வெளியிடலாம் என்றும் குறிப்பிட்டார். 

நான் இந்த மேடையில் பிரதமர் மோடிக்கு ஒரு சவால் விடுகிறேன். கர்நாடக அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்துள்ளது. நீங்கள் 56 இன்ச் மார்புக்கு சொந்தக்காரராக இருந்தால் அதில் பாதித் தொகையை நீங்கள் (மத்திய அரசு) ஏற்றுக்கொள்ளுங்கள். நான் சவால் விடுகிறேன், உண்மையில் உங்களுக்குத் தைரியம் இருந்தால் இதைச் செய்யுங்கள். ஆனால், நீங்கள் செய்ய மாட்டீர்கள்” என மிகவும் காட்டமாகப் பேசினார் ராகுல் காந்தி.