`விஞ்ஞான முறைப்படி கொள்ளையடிக்கவே ரூ.400 கோடி!’ - தினகரன் காட்டம்

`காவிரி ஆற்றில் தண்ணீர் வந்த பிறகு, அரசு தூர்வாரும் பணிகளுக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியது விஞ்ஞான முறைப்படி கொள்ளையடிப்பதற்காதான். திவாகரன் கட்சி லெட்டர் பேட் கட்சி மட்டுமே அவர்களிடத்தில் தொண்டர்கள் இல்லை. அவர் அருகில் இருப்பவர்கள் எல்லாம் இன்டர்நேஷனல் பிராடு. அவர் குறித்துப் பேசி என் நேரத்தை வீணடிக்காதீர்கள்.18 எம் எல் ஏ-க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரனின் மாமியாரும் டாக்டர் வெங்கடேஷின் தாயாருமான சந்தானலெட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் வெங்டேஷின் சித்தப்பாவான திவாகரன் இதில் கலந்துகொள்ளவில்லை. இதில் கலந்துகொண்ட தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,``ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு தானாகவே கொடுக்கின்ற காலம் வரும். தமிழக அரசு தூர்வாரும் பணிகளைச் செய்யாததால் காவிரியில் வருகின்ற தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. தண்ணீர் வீணாவது குறித்து என்னிடம் பலர் கேட்கிறார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒக்கேனக்கலிலிருந்து பூம்புகார் வரை காவிரி மற்றும் கிளை ஆறுகளில் வரும் தண்ணீர் ஒரு சொட்டுகூட வீணாகக் கடலில் கலக்காதவாறு அணை கட்டப்படும்.

தற்போதைய முதலமைச்சர் ஏழு வருடம் பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்துள்ளார். அவர், உறவினர்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் வேலை வாங்கிக் கொடுப்பதிலேயே குறியாக இருந்ததோடு, டெண்டர் எடுப்பதற்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்தார். குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் ஆற்றில் கலந்துவிட்டதா. கலெக்டர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிற நேரத்தில் பணிகளைச்  செய்துகொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறார் அப்படியென்றால் இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டிருந்தார்களா. தூர்வாரும் பணிகளைக் கோடைக்காலத்திலேயே திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். தண்ணீர் வந்த பிறகு, ரூ.400 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம் என்கிறார்கள். விஞ்ஞான முறைப்படி மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கவே, இப்போது பணத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு நல்லது கிடையாது. மக்கள் வரிப் பணத்தை சிவன் சொத்து என்பார்கள். சிவன் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள் நிலைமை என்னவாகும் எனத் தெரியும். இதுபோன்ற திருட்டை மக்கள் தடுப்பார்கள்.

துரைக்கண்ணு, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் என மூன்று அமைச்சர்கள் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லோரும் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அவர்கள் யாரும் வெளியே இருக்க முடியாது. எல்லோரும் உள்ளே வெளியேதான். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கர்நாடகாவில் எடியூரப்பா விஷயத்தில் அந்த மாநில கவர்னர் சரியாக நடந்துகொண்டார். ஆனால், தமிழகத்தின் அப்போதைய கவர்னர்  தவறு செய்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் சரியாக நடந்திருந்தால், அப்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும். 18 எம்.எல்.ஏ-க்களின் வழக்கின் தீர்ப்பு வரும்போது ஓட்டெடுப்பு நடைபெறும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை, அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே தி.மு.க போட்டது. ஜெயலலிதாவை கொன்றுவிட்டார்கள் எனக் கிளப்பிவிட்டதே தி.மு.க-தான். இதுபோன்ற பொய் பிரசாரம் என்றைக்கும் எடுபடாது. `கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள். அது இப்போது தி.மு.க-வில் நடந்து கொண்டிருக்கிறது. அழகிரி, தி.மு.க தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா நிற்கும்போது தி.மு.க-வில் தேர்தல் பணிகளைச் செய்தார். அவர் கட்சியில் பொறுப்பு கேட்கிறார். திவாகரன் ஆரம்பித்துள்ளது லெட்டர் பேடு கட்சி அவர்களிடத்தில் தொண்டர்கள் இல்லை. அவர் அருகில் இருப்பவர்கள் இன்டர்நேஷனல் பிராடாக இருக்கிறார்கள். திவாகரன் குறித்து என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்டு என் நேரத்தை வீணடிக்காதீர்கள். அ.ம.மு.க-வில்தான் 90 சதவிகிதம் தொண்டர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!