வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (15/08/2018)

அழகிரியை இயக்குவது பா.ஜ.கவா?- தமிழிசையின் `ஜோக்' பதில்

``அழகிரியின் பின்னால் பா.ஜ.க உள்ளது என்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்'' எனத் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழிசை

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உடல் சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையில் மோதல் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய அழகிரி, ``திமுகவின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர்'' எனப் பேசி அதிரடியைக் கிளப்பினார். அழகிரியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இந்தநிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. அழகிரிக்குப் பின்னால் பா.ஜ.க இருப்பதாகக் கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக். தி.மு.க.வை உடைக்க வெளியாட்கள் யாரும் தேவையில்லை. அதற்குக் கட்சியில் உள்ளவர்களே காரணமாக இருப்பார்கள். இனி தேசிய கட்சிகளின் ஆதரவில்தான் திராவிட கட்சிகள் இயங்க முடியும். 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.க தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாரத ரத்னா விருதுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி தகுதியானவர்” எனத் தெரிவித்துள்ளார்.