‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்

இந்திய தேசியக்கொடி, அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

நேற்று, நாடு முழுவதும் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அமித் ஷா தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது, கொடியை ஏற்றுவதற்கு மாறாக கீழே இறக்கினார். பின்னர்,  அதை உடனடியாக உணர்ந்த அவர், மீண்டும் வேகமாகக் கொடியை மேலே ஏற்றினார். இந்த வீடியோ, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவைத் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் அமித் ஷாவையும், பா.ஜ.க-வினரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் அமித் ஷாவின் இந்தச் செயலை நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றன. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதுபற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ சில சமயங்களில் இயற்கையின் விளையாட்டுகூட ஆச்சர்யமாகத்தான் உள்ளது. சிலர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், இயற்கையின் முன் அவர்கள் மிகவும் சிறியவர்கள்தான். அமித் ஷாவின் கைகளில் இருந்து தேசியக்கொடி பறக்க மறுத்துவிட்டது. இதன்மூலம், பாரத மாதா சோகமாக இருப்பதை உணர்த்திவிட்டாள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!