சசிகலா குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய கட்சி! | Dinakarans brother bhaskran to begin new party

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (21/08/2018)

கடைசி தொடர்பு:15:50 (21/08/2018)

சசிகலா குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய கட்சி!

சகிகலா குடும்பத்தில் இருந்து மற்றுமொரு புதிய கட்சி ஆரம்பமாகிறது. சசிகலாவின் அக்கா மகனும், டி.டி.வி. தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், வரும் 30-ம் தேதி புதிய கட்சி  தொடங்குகிறார். ஏற்கெனவே, திவாகரன் தனிக் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இப்போது பாஸ்கரனும் புதிய கட்சி தொடங்குவது தினகரனின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸ்கரனுக்காக வைக்கப்பட்டுள்ள ஃபிளெக்ஸ்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன், பாஸ்கரன். தினகரனின் சொந்த தம்பியான இவர், வரும் 30-ம் தேதி திருத்தணியில் புதிய கட்சி தொடங்குவதோடு, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்கிறார். இதற்கான பணிகளில் அவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். `ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவன் நான்’ என கூறிக்கொண்டு செயல்படும் பாஸ்கரன், ஏற்கெனவே பாஸ் என்கிற பெயரில் பாசறை நடத்திவந்தார். இப்போது, புதிய கட்சியைத் தொடங்குகிறார். `எம்.ஜி.ஆர்தான் என் குரு. அவர் வழியில் என் பயணம் இருக்கும்’ எனக் கூறும்  பாஸ்கரன்,  மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும், தினகரனுக்குப் போட்டியாகத்தான் இவர் புதிய கட்சி தொடங்குகிறார் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது.

பாஸ்கரன்

இதுகுறித்து அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். `வரும் 30-ம் தேதி, திருத்தணியில் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்கிறார். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டுவருகின்றன. எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், அவரின் ரசிகர்கள் என பெரும் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறோம். எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவரின் மகளுக்கு அன்றைய தினத்தில் இலவச திருமணம் செய்து வைப்பதோடு, அப்போதே கட்சியின்  பெயரையும் அறிவிக்கிறார். அதன்பிறகு, இன்னும் வேகமாக அவரின் செயல்பாடுகள் இருக்கும்’ என்றனர். 

இதுகுறித்து பேசிய மற்றொரு தரப்பு, `ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் கையை விட்டு அ.தி.மு.க சென்றது. அதுகுறித்த வழக்கு நடந்து கொண்டிருந்தாலும் தினகரன், அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கி செயல்பட்டுவருகிறார். அதன்பிறகு, தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மன்னார்குடியில் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இப்போது, பாஸ்கரனும் புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார். ஜெயலலிதா இருக்கும் வரை அடக்கி வாசித்த இவர்கள், இப்போது ஒவ்வொருவராகக் கிளம்பிவருகிறார்கள். சசிகலா குடும்பத்தில் இருந்து இன்னும் எத்தனை கட்சிகள் உருவாகப்போகிறதோ’ என நொந்து கொண்டனர்.

தினகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். `யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது. பாஸ்கரன் கட்சி தொடங்குவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகிறது. எதிர்காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக நாங்கள் இருப்போம்.வேறு யாரையும், அவர்களின் செயலையும் தினகரன் கவனத்தில்கொள்வதில்லை’ என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க