`இந்த ஆண்டும் இருண்ட ஆண்டுதான்' - கடை மடை பகுதி விவசாயிகள் குறித்து ஜி.கே வாசன் வேதனை!

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் இது வரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த  நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கடைமடை பகுதிகளான பட்டுகோட்டை  பகுதிகளில் உள்ள வறண்டு கிடக்கும் ஏரி குளங்களை பார்வையிட்டார். அப்போது 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லி குறிச்சி ஏரியில்  இரண்டு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து கொண்டு பார்வையிட்டதோடு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினார்.

ஜி கே வாசன்

இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் தண்ணீர் திறக்கபட்டும் காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது. ஆனால் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஏரிகள் குளங்கள் என அனைத்தும் வறண்டு கிடக்கிறது. இதனை பார்வையிட்ட ஜி.கே.வாசன் அதிராம்பட்டினம் அருகில் உள்ள  320 ஏக்கர் கொண்ட பரந்து விரிந்த செல்லிக்குறிச்சி ஏரி வறண்டு கிடந்ததை பார்த்து வேதனையடைந்தார். மேலும் அதில்  இறங்கி  இரண்டு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து கொண்டு  ஏரியை சுற்றி  வந்து பார்வையிட்டதோடு  ஏரியின் மையப்பகுதிக்கு வந்தவர் அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் விவசாயிகள் அனைவரோடும் சேர்ந்து கடைமடைக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் கூறியதாவது, ``டெல்டா பகுதியில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளது. தற்போது கடைமடைப் பகுதிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் அத்தனை விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த செல்லிக்குறிச்சி ஏரி தமாகாவை சேர்ந்த ரெங்கராஜன் எம்எல்ஏவாக இருந்த வரை ஏரி நிரம்பி வழிந்தது.

ஜி கே வாசன்

ஆனால் மூன்று ஆண்டுகளாக காவிரி நீர் இப்பகுதிக்கு வராததால் ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த முறை இரண்டு தடவை மேட்டூர் முழுக் கொள்ளளவை எட்டியும் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடியும் இங்கு  தண்ணீர் வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே கடைமடை விவசாயிகளுக்கு இந்த ஆண்டும் இருண்ட ஆண்டாகவே இருக்கும். மாநில அரசு நீர் மேலாண்மை மீது அக்கறை காட்டி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்" என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!