வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (29/08/2018)

`அண்ணே எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு; வந்திருங்க'!- ஓ.பி.எஸ்ஸுக்காக காத்திருக்கும் காமராஜ்

மன்னார்குடியில் தினகரனுக்குப் போட்டியாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் வரும் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார் அமைச்சர் ஆர்.காமராஜ். இந்த நிலையில், ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களைப் புறக்கணித்துச் செயல்படுவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் மீது குற்றச்சாட்டு கிளம்பியதோடு இது ஓ.பி.எஸ்ஸின் கவனத்துக்கும் சென்றது. இதனால் ஓ.பி.எஸ் பொதுக்கூட்டத்துக்கு வர மறுத்ததாகத் தகவல் வெளியாக அமைச்சர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அ.தி.மு.க-வினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்

மன்னார்குடி தேரடியில் கடந்த 5-ம் தேதி தினகரன் தலைமையில் அ.ம.மு.க-வினர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் ஒரு லட்சம் வரை மக்கள் திரண்டனர் என தினகரன் தரப்பில் கூறப்பட்டது. மேலும், கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் மற்றும் தினகரன் பேசியபோது, ``எங்க வீட்டு நிகழ்ச்சிகளில் சாம்பார் குழம்பு வாளி தூக்கிகிட்டு நின்றவர் ஆர்.காமராஜ். மாற்று வேட்டிக்கு வழியில்லாமல் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர் இன்றைக்குப் பலநூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்'' என விமர்சித்துப் பேசினர். கூட்டம் நடந்த இடத்துக்கு அருகிலேயே அ.தி.மு.க கட்சி அலுவலகம் இருந்தது. அங்கு இருந்த நிர்வாகிகள் தினகரன் பேச்சில் கொதிப்படைந்தனர்.

பொதுக்கூட்டத்துக்குக் கூடிய கூட்டம் மற்றும் தினகரன் பேசிய பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே இடத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்கு ஓ.பி.எஸ்ஸும் சம்மதம் தெரிவிக்க, `நான் யார் என தினகரனுக்குக் காட்டுகிறேன்' என சவால் விட்டுப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார் காமராஜ். இந்த நிலையில் திடீரென, கூட்டத்துக்கு வர முடியாது. அன்றைக்கு எனக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது' என ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். இதில், திகைப்படைந்த அமைச்சர் ஆர்.காமராஜ் மறுநாள், ``2-ம் தேதிக்குக் கூட்டத்தை மாற்றிக்கொள்கிறேன். அவசியம் நீங்கள் வர வேண்டும்'' எனக் கெஞ்சியிருக்கிறார். அதற்கு ``பார்க்கலாம்'' என ஓ.பி.எஸ் கூற என்ன செய்வதென புரியாமல் தவித்து வருகிறார் ஆர்.காமராஜ் என்கின்றனர்.

அமைச்சர் காமராஜ்

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``தினகரன் நடத்திய கூட்டத்துக்குப் போட்டியாகப் பெரிய அளவில் கூட்டம் நடத்த முடிவு செய்த ஆர்.காமராஜ் இதற்கு ஓ.பி.எஸ்ஸிடம் அனுமதி வாங்கி அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். இதற்கிடையில் திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைப் புறக்கணித்துச் செயல்படுவதாக ஆர்.காமராஜ் மீது  குற்றச்சாட்டு எழுந்தது. இவை ஓ.பி.எஸ்ஸின் கவனத்துக்கும் சென்றது. ஏற்கெனவே மதுசூதனன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மோதிக்கொள்ள கடும் கோபத்தில் இருந்து வருகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், ஆர்.காமராஜும் தன் ஆதரவாளர்களைப் புறக்கணிப்பது தெரிந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற ஓ.பி.எஸ், `அன்றைய தினத்தில் எனக்கு வேறு  நிகழ்ச்சி இருக்கிறது. அதனால் பொதுக்கூட்டத்துக்கு வர முடியாது' என மறுத்திருக்கிறார். அதற்கு ஆர்.காமராஜ், `அண்ணே எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. அதற்கு அடுத்த நாள் 2-ம் தேதி வேண்டுமானால் கூட்டத்தை மாற்றி வைத்துக்கொள்வோம். நீங்கள் வர வேண்டும்' எனக் கூற, `பார்ப்போம்' எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில், இப்போது, `1-ம் தேதியே கூட்டம்  நடத்த ஏற்பாடு செய்யுங்கள்; வருகிறேன்` என ஓ.பி.எஸ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் வருவாரா மாட்டாரா என்ற தவிப்பிலேயே ஆர்.காமராஜ் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்'' என்றனர்.

ஆர்.காமராஜ் தரப்பினரோ, ``செப்டம்பர் 1-ம் தேதி கூட்டம்  நடத்த அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அதற்குள் ஓ.பி.எஸ் திருநெல்வேலியில் புலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்கிறார் என்பதால் கூட்டம் 2-ம் தேதி மாற்றி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் 1-ம் தேதியே கூட்டம் நடக்க உள்ளது. இதில் நிச்சயமாக ஓ.பி.எஸ் கலந்துகொள்வார்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க