வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (30/08/2018)

கடைசி தொடர்பு:15:20 (30/08/2018)

`6 மணி நேரம்தான் இருக்கிறது'- அருண் ஜெட்லிக்கு நினைவூட்டும் ராகுல் காந்தி

ரபேல் போர் விமான ஊழல்குறித்து பதில் அளிக்க, நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, 24 மணி நேரம் கெடு விதித்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி

பா.ஜ.க-வுக்கு எதிராக, தற்போது ரபேல் போர் விமான ஊழலை ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ராகுல், ரபேல் போர் விமான ஊழல்குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

ரபேல் போர் விமானம் தொடர்பாக ராகுலின் தொடர் குற்றச்சாட்டுக்குப் பதில் கூறும் வகையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ரபேல் போர் விமானம் வாங்கியதுகுறித்து முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு, காங்கிரஸைக் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில், ராகுல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், `ரபேல் கொள்ளை பற்றி தேசத்தின் கவனத்தைத் திருப்பிய ஜெட்லிக்கு மிக்க நன்றி. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் குழு  அமைத்து விசாரணை செய்யலாம். உங்கள் தலைவர், அவரது நண்பரைக் காப்பாற்ற முயன்றுவருகிறார். அதனால், இது சிரமமாக இருக்கலாம். எனவே, ரபேல் தொடர்பாக ஆலோசிக்க 24 மணி நேரத்தில் பதில் அளியுங்கள்' எனப் பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து, `உங்கள் காலக்கெடு முடிவடைவதற்கு 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது.  இளம் இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது' என மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை ராகுல் தற்போது வெளியிட்டுள்ளார்.