அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு; ஆசிரியரை அதிரவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன்

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் திருக்கடையூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்  கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அன்னை அஞ்சுகம்  நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் நேராகத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றதோடு  அங்குள்ள ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியரிடம் விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் குறித்தும், எத்தனை நாள்களாக, எதற்காக விடுமுறையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்டார். இதன் பின்னர், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு வகுப்பறையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த ஒரு தையல் மிஷினைப் பார்த்து அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரிடம் எதற்காக இந்த வகுப்பறையில் தையல் மிஷின் இருக்கிறது என்று கேட்டார். ஆனால், அதற்கு அந்த ஆசிரியர் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். உடனே அந்த ஆசிரியரைப் பார்த்து கல்வித்துறை அமைச்சர் கேள்வி கேட்கிறேன். பதில் கூறாமல் ஆசிரியர் ஆகிய நீங்கள் நிற்கிறீர்கள் உங்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். உடனே அந்த ஆசிரியர் நான் பயிற்சி ஆசிரியர் அதனால் எனக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறினார்.

ஆய்வு

 உடனே மாணவர்களைப் பார்த்து உங்களுக்குத் தையல்மிஷின் பயிற்சி தரப்படுகிறதா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் `நோ சார்’ என்று கூறினர். அங்கு நின்ற கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாளிடம், ``ஏன் இங்கு தையல் மிஷின் உள்ளது” என்று கேட்டார். இதற்கு அவர் தையல்மிஷின் இருக்கும் அறையில் தேர்வு நடந்தது. அதனால், தையல் மிஷின் இங்கு வைக்கப்பட்டது என்று கூறினார். இதையடுத்து அடுத்த வகுப்பறைக்குச் சென்று மாணவர்களின் வருகை குறித்து கேட்டார். அதற்கு அந்த வகுப்பறையில் இருந்த ஆசிரியர் குறைவான மாணவர்களே வந்துள்ளனர் எனக் கூற ஏன் மாணவர்கள் வருகை இவ்வளவு குறைவாக உள்ளது. வசதிகள் குறைபாடு ஏதும் உள்ளதா எனக் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர் வசதிகள் எல்லாம் உள்ளன. மாணவர்கள் விளையாட்டுப் போட்டிக்குச் சென்று விட்டனர் என்று கூறினார். உரிய அனுமதி பெற்ற பின்னர்தானே சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்.  

இதையடுத்து மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாகக் கலந்துரையாடினார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், பள்ளிக் கல்வித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச தொலை பேசி எண் 14417 குறித்தும் அமைச்சர் கூறியதோடு, ``அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி அப்துல்கலாம் அரசுப்  பள்ளியில் படித்துதான் உயர்ந்தார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதே போல் உயர எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன். மாணவர்கள் அவரைப்போல் உயர வேண்டும்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!