வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (31/08/2018)

கடைசி தொடர்பு:12:55 (31/08/2018)

புதிய கட்சியின் தொடக்க விழாவைத் தடுத்தது ஆளும்கட்சியா, தினகரனா? - குழப்பத்தில் பாஸ்கரன் ஆதரவாளர்கள்!

தினகரனின் தம்பி பாஸ்கரன், 30-ம் தேதி திருத்தணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம்செய்ய, பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்திருந்தார். இதற்கு, முதலில் அனுமதிதந்த காவல் துறையினர், கடைசி நேரத்தில் மேலிடத்து உத்தரவு எனக் கூறி அனுமதி மறுத்துவிட்டனர். ஆளும் தரப்போடு சேர்ந்துகொண்டு, பாஸ்கரனின் அண்ணன் தினகரன் தான் இப்படிச் செய்கிறார் என பாஸ்கரனின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஸ்கரன்

சசிகலாவின் அக்கா மகனும் தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், ஏற்கெனவே, 'தலைவன் பாஸ் பாசறை' என ஒரு இயக்கத்தை நடத்தி வந்தார். பின்னர், அதை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். அதன்படி, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, இதுவரை 5 மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அதற்காக வரும் பாஸ்கரனை வரவேற்று, எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு ஃப்ளெக்ஸ் வைத்து மகிழ்ந்தனர் அவரின் ஆதரவாளர்கள். இந்த நிலையில், 30-ம் தேதி (நேற்று)  திருத்தணியில் நடந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவரின் மகளுக்கு இலவச திருமணம் நடத்திவைப்பதோடு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி, கட்சியின் பெயர்  அறிவிப்பு மற்றும் கொடியை அறிமுகம்செய்வதாக அறிவித்திருந்தார். அதற்கான  ஏற்பாடுகளை அவரின் ஆதரவாளர்கள் செய்தனர். இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டது காவல்துறை. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் உள்ளிட்டோர், மற்றொரு நாளில் நடத்துவதற்கு நீதிமன்றம்மூலம் அனுமதி வாங்க முயன்றுவருவதோடு, திடீரென அனுமதி மறுப்பதற்குக் காரணம் என்ன? இதன் பின்னணியில் ஆளும் தரப்பு இருக்கிறதா அல்லது தினகரன் இதைச் செய்யவைத்தாரா எனக் குழம்பியுள்ளனர்.

இதுகுறித்து பாஸ்கரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``பாஸ்கரன், எம்.ஜி.ஆரை குருநாதராகப் பின்பற்றி செயல்படுபவர். அவர் படத்தைப் போட்டு, அவர் பெயரைப் பயன்படுத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க இருந்தோம். அன்றைக்கு, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம்செய்ய இருந்தார். இதற்காக, முதலில் நாங்கள் காவல் துறையிடம் அனுமதி கேட்டபோது ஆர்வமான அவர்கள், 'மக்களுக்கு நல்லது செய்வதற்குதானே... தாராளமாகச் செய்யுங்கள்' என்று கூறினார்கள். நாங்க அனைத்து ஏற்பாடுகளும் செஞ்சு முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில் காவல்துறை எங்களை அழைத்து, 'கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பத்து துறைகளில் அனுமதி வாங்க வேண்டும்' என்று கூறினார்கள். அதிர்ச்சியடைந்த நாங்கள், `என்ன சார் எந்த கட்சிக்கும் இல்லாத கெடுபிடி எங்களுக்குக் காட்டுறீங்க' எனக் கேட்டதற்கு, 'இது மேலிடத்து உத்தரவு. நாங்க என்ன செய்ய' என்றதோடு அனுமதியும் மறுத்துவிட்டனர்.

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவரின் நூற்றாண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அரசு, எம்.ஜி.ஆரின் படத்தைப் போட்டு அவரின் பெயரில் வழங்கப்படும்  நலத்திட்ட உதவிக்கு மட்டும் தடைபோடுவது ஏன் எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் ஆளும் தரப்பு இருக்கிறதா... இல்லை, பாஸ்கரனின் அண்ணன் தினகரன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் எங்களை முடக்கிவிடவும் முடியாது. ஆரம்பத்தில் இருந்தே தினகரன், நாங்கள் புதிய கட்சி ஆரம்பிப்பதை விரும்பவில்லை. சொந்த தம்பியே கட்சி ஆரம்பித்தால் தனக்குப் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறார். அதனால், இதற்காக ஆளும் தரப்பில் உள்ளவர்களிடம் பேசி இதுபோன்று செய்திருக்கலாம் என்றும் பாஸ்கரன் சந்தேகிக்கிறார். இது அவரைக் கோபப்படுத்தியதோடு, நீதிமன்றம்மூலம் அனுமதி வாங்கி இன்னும் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள், கட்சிப் பெயர் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார்'' என்றனர்.

தினகரன் தரப்போ, ``நாங்கள் யார் என்ன செய்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி என்ன என்பதைப் பற்றி பார்ப்பதில்லை. எங்களின் வளர்ச்சியைக் கவனத்தில்கொண்டே செயல்பட்டுவருகிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆளும் தரப்போடு நாங்கள் கடுமையாக மோதிக்கொண்டிருக்கிறோம். அனுமதி மறுக்க நாங்கள் எப்படி காரணமாக இருக்க முடியும்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க