Published:Updated:

இன்று மகன் மீது புகார் மழை!

இன்று மகன் மீது புகார் மழை!

பிரீமியம் ஸ்டோரி
இன்று மகன் மீது புகார் மழை!

மு.க.ஸ்டாலின் மீது புகார் கிளம்பி இருப்பதுதான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக். இதுபற்றி கடந்த இதழிலேயே விரிவாக எழுதி இருந்தோம். ஸ்டாலின் மீது புகார் சொன்னவர் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சேஷாத்ரி குமார். அந்த வழக்கை வைத்துக்கொண்டு பரபரப்பு இல்லாமல் அமைதியாக காய்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறது சென்னை காவல் துறை!

 'ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள 8-ஏ என்ற எனது வீட்டை, மு.க.ஸ்டாலின் தனது மகளுக்காக அபகரித்துக்கொண்டார்’ என்று, சேஷாத்ரி குமார் என்பவர் கடந்த 29-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். இதுபற்றி  விசாரணை நடத்தியது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ்.  மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது கடந்த 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று, ராமநாதபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின், அன்று இரவே திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நள்ளிரவு 2-30 மணிக்கு வந்தார். விமான நிலையத்திலேயே கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. ஆனால், போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக இருப்பதால், கைது படலம் அன்று அரங்கேறவில்லை.

இன்று மகன் மீது புகார் மழை!

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? புகார் கொடுத்து இருந்த சேஷாத்ரி குமாரை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

##~##

''1962-ல் எங்க அப்பா நாராயணசுவாமி ஐயர்தான் சென்னை ஷெரீஃப். அவர், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு மூன்று முறை தொடர்ந்து தலைவராக இருந்தவர். ஒரே நேரத்தில் 20 நிறுவனங்களில் இயக்குநராகவும் இருந்தார். வணிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பல பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. எம்.எல்.சி.யாகவும் பதவி வகித்து இருக்கிறார். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர். சி.என்.அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடனும் நட்புடன் இருந்தவர் என் அப்பா. அதனால்தான், ஷெரீஃப் பதவியை என் அப்பாவுக்கு வழங்கினார் அண்ணா. இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என் வீடு இருக்கும் தெருவுக்கு 'சித்தரஞ்சன் சாலை’ என்று பெயர் சூட்டியதும் என் அப்பா நாராயணசுவாமி ஐயர்தான். 1973-ல் நடந்த என் கல்யாணத்துக்கு மு.கருணாநிதி வந்து வாழ்த்தினார். அதுக்குப் பிறகு, 90-ல் நான் தொடங்கிய என் நிறுவனத்தையும்  கருணாநிதிதான் திறந்துவைத்தார். இதெல்லாம் அவருக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.'' என்று தங்களது குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் உள்ள நெருக்கத்தைச் சொன்னவர், அதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் கொடுத்தார்!

''என் பங்காகக் கிடைத்த சித்தரஞ்சன் சாலையில் இரண்டரை கிரவுண்ட் வீட்டைத்தான் என்னிடம் இருந்து பறித்துவிட்டார்கள். 2009-ம் ஆண்டில், சீனிவாசன் என்பவரும் ராஜாசங்கரும் என்னைச் சந்தித்து, ஸ்டாலின் என்னைப் பார்க்க விரும்புவதாக கூறினர். நான் ஒரு இன்ஜினியர். அமெரிக்காவில் எம்.எஸ். படித்தவன். நதிகள் இணைப்பு குறித்து ஏராளமாக எழுதியும், கருத்தரங்குகளில் பேசியும் வருகிறேன். ஜனாதிபதியாக இருந்தபோது அப்துல் கலாம் என்னை இரண்டு முறை ராஷ்டிரபதி மாளிகைக்கு அழைத்துப் பேசி இருக்கிறார். 'சரி, நதிகள் இணைப்பு பற்றி ஏதாவது பேசுவதற்குத்தான் ஸ்டாலின் அழைக்கிறார் போல’ என்று நினைத்துத்தான் அவர் வீட்டுக்குப் போனேன். நதிகள் குறித்து சுமார் அரை மணி நேரம் அவரிடம் பேசினேன். 'சாருக்கு நாட்டுப்பற்று ரொம்ப ஜாஸ்தியா இருக்கு!’ என்று கூறினார். அதன் பிறகுதான், என் வீட்டு விஷயத்தை ஆரம்பித்தனர். 'அதை விற்க வேண்டிய அவசியம் இப்போது எனக்கு இல்லை’ என்று கூறினேன். அருகில் நின்றுகொண்டு இருந்த சீனிவாசன், ராஜாசங்கர் இருவரையும் காட்டிப் பேசிய ஸ்டாலின், 'இந்த வீடு விஷயமா அவங்க பேசுவாங்க’ என்று கூறிவிட்டார்.

அதன் பிறகுதான், சீனிவாசனும் ராஜா சங்கரும் என்னைத் தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தனர். சுப்பா ரெட்டியும் ஒரு முறை என் வீட்டுக்கு வந்தார். அப்போது, 'அந்த வீட்டுக்கு மதிப்பு எதுவும் கிடையாது. அந்த இடத்துக்கு மட்டும்தான் மதிப்பு இருக்கிறது’ என்று சொன்னார். நான், 'அந்த வீட்டை விற்கவே இல்லை என்று சொல்கிறேன், நீங்கள் எதுக்கு அதற்கான மதிப்பு எல்லாம் போடுகிறீர்கள்’ என்று கேட்டேன். அவரும், 'நீங்கள் வீட்டை விற்க இருப்பதாகச் சொன்னதால்தான் வந்தேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 2009-ல் இருந்து, ராஜா சங்கரும் சீனிவாசனும்தான் தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர்.

இன்று மகன் மீது புகார் மழை!

ஒரு நாள், பத்திரப் பதிவாளரை என் வீட்டுக்கே அழைத்து வந்து, என் மனைவி மற்றும் மகளிடம் இருந்து என் பெயருக்கு 'பவர்’ எழுதி வாங்கினார்கள். அன்று நடந்த மிரட்டலில் என் மனைவியும் மகளும் மிகவும் பயந்துவிட்டனர். வீட்டை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள் என்றுகூட என்னிடம் சொன்னார்கள். ஆனால், என் அப்பா நாராயணசுவாமி - அம்மா விசா​லாட்சி நினைவாக 'நார்விஷா’ என்று பெயர் சூட்டி இருந்த அந்த வீட்டை விற்க எனக்கு இஷ்டம் இல்லை. 2009- ஆகஸ்ட்டில், என் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனே, கைலாயம் சென்றுவிட்டேன். 'இந்தப் பிரச்னையில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியை எனக்குக் கொடு’ என்று சிவனிடம் வேண்டினேன். ஒரு மாதம் கழித்து சென்னை திரும்பினேன். மிரட்டல் மீண்டும் தொடங்கியது. நானும் என் மனைவியும் சென்று, ஸ்டாலின் மனைவி துர்காவதி மற்றும் உதயநிதியைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று சீனிவாசனிடம் கூறினேன். அவர் எங்களை ஸ்டாலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எங்களைச் சந்திப்பதை உதயநிதி தவிர்த்து விட்டார். துர்காவதி மட்டும்தான் எங்களிடம் பேசினார். 'பக்கத்துலயே இருக்கே, அதான் வாங்கிப் போட்டுடலாம்னு நெனச்சேன்’ என்று சொன்னார். அது என் தாய் - தந்தை நினைவாக இருக்கும் வீடு என்பதை அவரிடம் விளக்கினேன். அவருக்கு அது புரியவில்லை. 'வாடகைக்கு வேண்டுமானால் உங்​களுக்​குத் தருகிறேன்’ என்றேன். அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது,  உதயநிதி கொடுக்கச் சொன்னதாக 'கைடு லைன் வேல்யூ’- புத்தகத்தை என்னிடம் கொடுத்தார் சீனிவாசன். 'இது எதுக்கு? எனக்கு தேவைன்னா இன்டர்நெட்ல பாத்துக்குவேன்’ என்றேன்.

அதற்குப் பிறகு மிரட்டல் அதிகரித்தது. 'நீங்களா குடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்’னு சீனிவாசன் சொன்னார். ஒரு கட்டத்தில், 'இதே தெருவில் எனக்கு இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றுகூட சொல்லிப் பார்த்தேன். என் வீட்டுக்கு எதிரே ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்கு சொந்தமாக இடம் இருந்தது. ஆனால், ஸ்டாலினுடைய ஆட்களோ, 'எங்களுக்கும் அவருக்கும் இப்போது உறவு நன்றாக இல்லை. அது முடியாது’ என்று சொல்லி விட்டனர்.

இதற்கெல்லாம் பிறகுதான் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த ராஜா சங்கரும் சீனிவாசனும், 'உங்ககிட்ட​தான் இவ்வளவு நாள் பொறுமையா இருக்கோம்’ என்று கடுமையாக மிரட்டினர். திடீர்னு ஒரு நாள், திருவல்லிக்கேணியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலத்துக்கு என்னை இழுத்துட்டுப் போனங்க. அங்கதான், வேணுகோபால் ரெட்டியைப் பார்த்தேன். அவருக்கு நான் என் வீட்டை விற்பதாகப் பத்திரம் தயார் செய்துவைக்கப்பட்டு இருந்தது. அதில் நான் கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இவர்கள்தான் இப்போது என்னை யார் என்றே தெரியாது என்று சொல்கிறார்கள்.

என் வீட்டை அபகரித்த ஒரு மாதத்துக்குப் பிறகு, சீனிவாசன் மீண்டும் என் வீட்டுக்கு வந்து, என் காலில் விழுந்து அழுதார். அவருடைய கண்ணீர் என் கால்களை நனைத்தது. 'என்னைக் கழட்டி​விட்டுட்​டாங்க சார்...’ என்று கதறினார். சாய்பாபா பக்தன்னு சொல்லிட்டு இந்த மாதிரி செய்றியேன்னு திட்டினேன்.

இப்போ நான் போலீஸில் புகார் கொடுத்ததை என் உறவினர்கள், நண்பர்களில் சிலர் வரவேற்கிறாங்க. சிலர் 'அவங்ககிட்ட எல்லாம் ஏன்டா மோதுற?’னு திட்டுறாங்க. ஆனா, நான் கொடுத்த புகாருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் அரசியலுக்குமே சம்பந்தம் இல்லை. நான், போலீஸையும் கோர்ட்டையும்தான் நம்புறேன். என் வீட்டை விற்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு அறிமுகமே இல்லாத ஹைதராபாத் வேணுகோபால் ரெட்டிக்கு எதுக்கு நான் விற்கணும்? அடிப்படையான இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?'' என்று வருத்தத்துடன் பேசி முடித்த சேஷாத்ரி குமாரின் கண்கள் கலங்கி இருந்தன.

வேணுகோபால் ரெட்டியைப் பற்றி விசாரிக்க போலீஸார், ஹைதராபாத் சென்றுள்ளனர். சேஷாத்ரி குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் போலீஸார்  வாக்குமூலம் வாங்கி உள்ளார்கள். 'தொடர்ந்து தனக்கு வந்த மிரட்டல்களை இவரிடம்தான் குமார் தினமும் சொல்லி வந்தார்’ என்கிறது போலீஸ்.  

- எஸ்.கோபாலகிருஷ்ணன்

படம்: கே.கார்த்திகேயன்

''குமார் சொல்வதில் உண்மையில்லை!'' 

ஸ்டாலின், 2-ம் தேதி காலை தனது பரிவாரங்களுடன் டி.ஜி.பி. அலுவலகம் வந்தார். அங்கு, டி.ஜி.பி (நிர்வாகம்) ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், ''ஒரு சொத்து பரிவர்த்தனை தொடர்பாக என் மீதும், என்னுடைய மகன் உதயநிதி மற்றும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது ஒரு அடிப்படையற்ற புகார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எனது மகன் உதயநிதி, அவரது கம்பெனி மூலமாக அந்தச் சொத்தின் தற்போதைய உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார். புகார்தாரருடன்( அதாவது குமாருடன்!) எந்தத் தொடர்பும் கிடையாது. குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், அது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான, கவலை​யளிக்கும் புகார் கொடுத்ததற்காக, புகார்​தாரர் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறி இருந்தார் ஸ்டாலின்.

இன்று மகன் மீது புகார் மழை!

நான் ஒரு அப்பாவி: உதயநிதி

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில், உதயநிதி தாக்கல் செய்துள்ள மனுவில், ''இந்தக் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நில அபகரிப்பு செய்தது போல தோற்றம் உருவாக்கி பொய்யான புகார் கொடுத்து உள்ளார். என் தந்தை வீட்டுக்கு அருகில் அந்த இடம் இருப்பதால், அந்த இடத்தை நான் வாடகைக்கு எடுத்து உள்ளேன். புகாரின் தன்மையை ஆராயாமல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்​ளனர். நான் ஒரு அப்பாவி. எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

 எனக்கு தொடர்பு இல்லை: ராஜாசங்கர்

இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, ராஜா சங்கரை தொடர்பு கொள்ள பல முறை முயன்றோம். அவரது தொடர்பு எண்கள் எதுவும் உபயோகத்தில் இல்லை. அவரது வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இந்த சொத்து பரிமாற்றத்தில் ராஜா சங்கருக்கு எந்தத் தொடர்பும் இல்லை'' என்று உறுதியாகச் சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு