Published:Updated:

கடன்... மிரட்டல்.. விஷ ஊசி!

பெங்களூருவை அழவைத்த மருத்துவர் குடும்பம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

டிசம்பர் 2-ம் தேதி. அளவுக்கு மீறிய மூடு​பனியுடன் பெங்களூருவுக்கு விடியல் வந்தது. சூரியன்கூட காலதாமதமாகவே வந்தான். ஆனால் காலன்...? 

    பெங்களூரு சாம்ராஜ்பேட்டை வால்மீகி நகரில் 'டாக்டர் அமானுல்லா கான் மருத்துவமனை’ எல்லோருக்கும் பரிச்சயம். நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில், முதல் இரண்டு மாடிகளில் கிளினிக் நடத்திக்கொண்டு, மற்ற இரண்டு மாடிகளில் குடும்பத்தோடு வசித்து வந்தார் டாக்டர் அமானுல்லா. இவரது மனைவி நவீதா பானுவும் டாக்டர். மங்களூரு மெடிக்கல் காலேஜில் படிக்கும்போதே காதலித்து, குடும்பத்தை எதிர்த்துக் கை கோத்தவர்கள். மூத்த மகன் நவாஸ் ரஷீத்தும்  டாக்டர்தான். மகனுக்காக மைசூர் ரோட்டில் கடந்த ஆண்டு புதிதாக ஒரு கிளினிக் ஆரம்பித்துக் கொடுத்தார். இளைய மகன் நிஜாம் ரஷீத் கோலார் மெடிக்கல் காலேஜில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர். இவர்கள் நான்கு பேரும் விஷ ஊசி போட்டு, ஒரே படுக்கையில் இறந்துகிடக்க... ஊரே சோகத்தில் அதிர்ந்து நின்றது.

கடன்... மிரட்டல்.. விஷ ஊசி!

டாக்டரின் நண்பர் நம்மிடம் பேசினார். ''டாக்டர் ரொம்பத் தங்கமான மனுஷன். ஏழைங்ககிட்ட பத்தோ இருபதோ வாங்கிட்டு, ட்ரீட்மென்ட் பண்ணுவார். ஊரே மெச்சிக்கிற மாதிரி வீட்ல நாலு பேரும் டாக்டர். ரொம்பச் சந்தோஷமாத்தான் இருந்தாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வங்கியில் ரெண்டு கோடி ரூபா கடன் வாங்கி, கிளினிக்கோடு கூடிய வீடு கட்டினார். பெரிய மகனும் டாக்டர் ஆகிட்டதால், அவருக்கும் கடன் வாங்கி, தனியா கிளினிக் வெச்சிக் கொடுத்தார். அப்பப்போ தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏகமாக கடன் வாங்கி இருக்கார். ரெண்டாவது பையனும் மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறதால், ஏகப்பட்ட செலவு. டாக்டர் எதிர்பார்த்த அளவு கிளினிக்ல வருமானம் கிடைக்கலை. கடனும் நாளுக்கு நாள் வட்டி மேல் வட்டி போட்டு அவர் கழுத்தை நெரிக்க ஆரம்பிச்சிருக்கு. கடன்காரங்க வீடு தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க. சில சமயங்கள்ல மனசு வலிக்கிற மாதிரி தாறுமாறாப் பேசவும் செஞ்சாங்க. இதனால், டாக்டர் கொஞ்ச நாளாவே ரொம்ப அப்செட்டா இருந்தார். 'கிளினிக், கடன் எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா ஒரு வாரம் ஏதாவது ஊருக்குப் போய்ட்டு வாங்க’ன்னு சொன்னேன். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட ஃபோன் பண்ணி ரொம்ப நேரம் பேசினார். 'வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது உருட்டி புரட்டிச் சமாளிச்சிடலாம்’ன்னு ஆறுதல் சொன்னேன். அதுக்குள்ளே அவசர முடிவெடுத்து விஷ ஊசி போட்டு, குடும்பத்தோட போயிட்டாரே...'' என உடைந்த குரலில் வெம்பினார்.

கடன்... மிரட்டல்.. விஷ ஊசி!

மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்த லட்சுமி, ''ரெண்டு வருஷமா டாக்டரோட கிளினிக்ல வேலை செய்றேன். அவங்க ஃபேமிலியில் ஒருத்தியா என்னைப் பார்த்துக்கிட்டாங்க. வழக்கமா காலையில் ஏழரை மணிக்கு ஹாஸ்பிட்டல் திறந்திடுவோம். ஆனா, அன்னைக்கு நானே அரை மணி நேரம் லேட்டாத்தான் வந்தேன். அப்பவும் கிளினிக் திறக்காம இருக்கவே... மேலே இருக்கிற டாக்டர் வீட்டுக்கு சாவி வாங்கப் போனேன். ரொம்ப நேரம் காலிங் பெல்லை அழுத்தியும், கதவைத் தட்டியும் திறக்கவே இல்லை. அப்புறம் ஜன்னலைத் திறந்து பார்த்தப்ப, பெட்ல நாலு பேரும் வாயில நுரைத் தள்ளி செத்துக்கிடந்தாங்க. நான் அலறி அழுததைப் பார்த்துத்தான் அக்கம் பக்கம் இருந்தவங்க ஓடி வந்தாங்க. டாக்டருக்குக் கடன் பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால் அதை எல்லாம் சமாளிக்கக்கூடிய தைரியம் அவர்கிட்ட இருந்துச்சு. என்னகாரணத் துக்காக இப்படிப் பண்ணி​கிட்டாங்கன்னே தெரியலை'' என்று கண்ணீரைத் துடைத்துக்​கொண்டே பேசினார்.

    பெங்களூரு இணை கமிஷனர் சோனியா நாரங்கிடம் பேசினோம். ''கிளினிக், வீடு இரண்டையும் வெச்சு டாக்டர் அமானுல்லா பல வங்கிகளில் மூன்றரைக் கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கார். இது தவிர பல்வேறு மருந்துக் கம்பெனிகளிடமும் கிளினிக்குக்குத் தேவையானவற்றைக் கடனா வாங்கி இருக்கார். இன்னும் சில பிரைவேட் கம்பெனிகளிடமும் கடன் இருக்கு. தன்னுடைய மனைவி நவீதா பெயரில் இருந்த சொத்துகளை விற்று கொஞ்சம் கடனை அடைச்சு இருக்கார். முழுக் கடனையும் அடைக்க முடியாமல், ஒருவருக்கொருவர் ஓவர் டோஸ் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். டாக்டர் அமானுல்லாவை வங்கிகள் மிரட்டியதா அல்லது மருந்து கம்பெனி ஆட்கள் மிரட்டினார்களா என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

யாரை விசாரித்து நடவடிக்கை எடுத்தாலும், ஏழைகளுக்கு இரங்கிய மருத்துவ குடும்பம் மீண்டும் வருமா என்ன?

- இரா.வினோத், படங்கள்: ஜஸ்டின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு