Published:Updated:

Bhima Koregaon கலவரத்துக்கு காரணம் எனச் சொல்லி போலீஸ் கைதுசெய்த அந்த ஐவர் யார்..?

Bhima Koregaon கலவரத்துக்கு காரணம் எனச் சொல்லி போலீஸ் கைதுசெய்த அந்த ஐவர் யார்..?
Bhima Koregaon கலவரத்துக்கு காரணம் எனச் சொல்லி போலீஸ் கைதுசெய்த அந்த ஐவர் யார்..?

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைசெய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் #MetooUrbanNaxal என்ற ஹாஸ்டேக் புதனன்று ட்ரென்டிங்கில் இருந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அந்த அளவுக்கு என்னென்ன செய்துவிட்டார்கள்? அவர்களின் பின்னணி என்ன?

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைசெய்ய முயன்றதாக மார்க்ஸிய, தலித்தியச் சமூகச் செயல்பாட்டளர்கள் ஐந்து பேரை ஆக.28 அன்று புனே காவல்துறை கைது செய்தது. இதற்கு இந்திய அளவில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் #MetooUrbanNaxal என்ற ஹாஸ்டேக் ட்ரென்டிங்கில் இருந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் இந்த அளவுக்கு என்னென்ன செய்துவிட்டார்கள்? அவர்களின் பின்னணி என்ன?

கவிஞர் வரவர ராவ் (Varavara Rao)

தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியிலிருக்கும் சின்ன பொண்டிளை என்ற கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாள்களிலிருந்து கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களை எழுதத்தொடங்கினார். தெலுங்கு இலக்கியம் படித்த இவர், இலக்கியப் பேராசிரியராகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் விளம்பரப் பிரிவில் பதிப்பக உதவியாளராகவும் பணியாற்றியவர். 1966-ல் ’சஹிதி மித்ருல’ என்ற நவீன தெலுங்கு இலக்கிய மன்றத்தையும் 1970-ல் ‘திரகபாடு’ என்ற தெலுங்கு கவிஞர்களுக்கான ஒரு குழுவையும் உருவாக்கினார். பின்னர், புரட்சிகர எழுத்தாளர்களுக்கான ‘விராசம்’ என்ற சங்கத்தையும் நிறுவியதில் இவருக்கு பங்கு உண்டு.

தெலுங்கில் ‘சுரோஜானா’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்திவந்தார். இவர் எழுதிய கவிதைகள் பல்வேறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை, தமிழ் மொழியைத் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இலக்கியம் மூலமாகவும் இலக்கியம் சார்ந்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். நெருக்கடிநிலை காலத்திலும் அதன்பின்னரும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு  சமூகப் பிரச்னைகளுக்குக்காக சிறைவாசம் அனுவனித்தவர். 

வெர்னான் கன்சல்வெஸ் (Vernon Gonsalves)

65 வயதான இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் தொழிற்சங்கவாதி. மும்பையின் பல்வேறு முன்னணி கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கைதுசெய்யப்படுவது இது முதன்முறை இல்லை. இதற்குமுன் 2007-ல் மகாராஷ்டிராவில் தன் வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். அப்போது இவர் மீது கிட்டத்தட்ட 20 வழக்குகள் பதியப்பட்டன. ஆனால், அவற்றில் போதிய ஆதாரம் இல்லாமல் 17 வழக்குகளிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து இந்த ஆறு ஆண்டுகளில்தான் கான்சல்வெஸ் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 

சுதா பரத்வாஜ் (Sudha Bharadwaj)

அமெரிக்காவில் இந்தியத் தம்பதிக்குப்  பிறந்த இவர் தனது 11-வது வயதில் இந்தியா  திரும்பினார்.  தொழிற்சங்கச் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் மற்றும் தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனப் பல பணிகளைச் செய்துவருகிறார். கான்பூர் ஐஐடி-யில் கணக்கில் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஐஐடி மாணவராக இருந்தபோதே உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் மிக மோசமான பணிச்சூழலை வெளியில் கொண்டுவந்து, அவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கிடைக்கச்செய்தார். 1986-ம் ஆண்டில் நியோகியின் ‘சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா’வுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய இவர், ராய்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். முக்தி மோர்ச்சாவுடன் தொடர்புகொண்டிருந்தபோது பிலாய் பகுதியில் சுரங்கங்கள் மற்றும் ஆலைகளில் பணியற்றிய தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார். தலித் மற்றும் பழங்குடிகளின் நில உரிமை, கல்வி உரிமை, ஆகியவற்றிற்காக மிகத் தீவிரமாகச் செயல்பட்டவர்.

கௌதம் நவ்லகா (Gautam Navlakha)

மனித உரிமைகள் செயற்பாட்டாளர், பத்திரிகையாளர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக Economic and Political Weekly பத்திரிகையில் தலையங்கம் உட்பட பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இவரின் கட்டுரைகள் குறிப்பாக, காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பற்றியதாகவும் அங்கே இராணுவத்தால் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கக்கோரியும் இருக்கும். 2010-ல் காஷ்மீரில் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டு ஸ்ரீநகர் விமானநிலையத்திலிருந்து தில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் போராட்டங்களை மையமாக வைத்து, ‘Days And Nights In The Heartland Of Rebellion’ என்ற நூலை எழுதியுள்ளார்.

அருண் ஃபெரைரா (Arun Ferreira)

மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர், மும்பைக்காரர். மும்பையின் புகழ்பெற்ற செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்து பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு இவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் மிகவும் பிரபலமானவை. 2007-ல் அரசியல் சட்ட அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 2013-ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதிலிருந்து அரசியல் கைதிகள், சிறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்காகத் தீவிரமாகச் செயலாற்றிவருகிறார். தற்போது மும்பையின் சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆணையத்தின் வரலாறு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு