`இது குற்றமெனில்..!' - ஷோபியாவுக்கு குரல்கொடுக்கும் கமல்ஹாசன்

விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜன் முன்பு பா.ஜ.க-வை எதிர்த்து முழக்கமிட்ட  மாணவி ஷோபியாவுக்கு, கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

சென்னையிலிருந்து விமானம்மூலம் நேற்று தூத்துக்குடிக்குச் சென்றார், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் கனடாவில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் ஷோபியா என்ற மாணவியும் பயணித்துள்ளார். விமானத்தில் தமிழிசையைப் பார்த்த ஷோபியா, ’பாசிச பா.ஜ.க ஒழிக’ என்று கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தூத்துக்குடி விமானநிலையம் வந்த பின்பும் அதையே கூறியுள்ளார். இதையடுத்து, பா.ஜ.க-வினருக்கும் மாணவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஷோபியா கைது செய்யப்பட்டு, இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஷோபியாவுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களிடையே ஆதரவு அதிகரித்துவருகிறது. 

இந்நிலையில், ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ' பொது இடங்களில் குரல் எழுப்புவதும் விமர்சிப்பதும் குற்றமெனில், அத்தனை அரசியல்வாதிகளும் கைதுசெய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை ஷோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!