சென்னையில் கிழிக்கப்பட்ட அழகிரி பேனர்கள் - கொந்தளிப்பில் ஆதரவாளர்கள்!

மு.க அழகிரி சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ள நிலையில் அவரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சில மர்மநபர்களால் கிழிக்கப்பட்டுள்ளன. 

அழகிரி

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். ஆனால், இதுவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்த நிலையில், இன்று தன் ஆதரவாளர்களுடன் சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த உள்ளார் மு.க அழகிரி. இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகள் நேற்றிலிருந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

பேரணியையொட்டி கருணாநிதி நினைவிடத்தை அலங்கரிக்கும் பணிகளில்  நேற்று இரவு அழகிரி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அங்கே வந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் ‘நீங்க எப்படி அலங்காரம் செய்யலாம். சமாதியில் மலர் அலங்காரம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவே வழக்கமாகி விடும். சமாதிக்கு வெளியில் அலங்காரம் செய்துகொள்ளுங்கள்’ எனக் கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மோதல் முடிவுக்கு வந்து கருணாநிதியின் நினைவிடமும் அலங்கரிக்கப்பட்டுவிட்டது.  

இந்த நிலையில், பேரணிக்கு கலந்துகொள்ள வரும் அழகிரியை வரவேற்கும் விதமாக அவரின் ஆதரவாளர்களால் வாலாஜா சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில மர்மநபர்கள் கிழித்துள்ளனர். யார் இந்தச் செயலை செய்தார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. ஆனால், மலர் அலங்காரத்தில் மோதல், பேனர் கிழிப்பு ஆகிய தொடர் சம்பவங்கள் அழகிரி தரப்பினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!