‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி | MK Alagiri speaks about his rally in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (05/09/2018)

கடைசி தொடர்பு:13:03 (05/09/2018)

‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி

`தனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எதுவும் இல்லை' என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

அழகிரி

தன்னை தி.மு.க-வில் இணைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி இன்று சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு வருகிறார். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

பேரணியில் கலந்துகொள்ளும் முன்பு மு.க அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``கலைஞர் இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரின் விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே  தீர்மானிக்கப்பட்டு பேரணி நடைபெறுகிறது. என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை. என்னைக் கட்சியில் சேர்த்தால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அதை ஊடகங்கள் பிரித்து, `நான் அவரைத் தலைவராக ஏற்கத் தயார்' எனக் கூறிவருகின்றனர். எங்கள் இருவருக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை உள்ளது. குடும்பத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.