அரசு முத்திரையிடப்பட்ட லெட்டர் பேட்... கட்சித் தீர்மானங்களை எழுதிய தி.மு.க நிர்வாகிகள்

எம்.எல்.ஏ-க்கள் பயன்படுத்துவதற்காக சட்டமன்றத்தில் தரப்படும் அரசு முத்திரையிட்ட லெட்டர் பேடில் தஞ்சாவூர் பகுதி தி.மு.க-வினர் கட்சிக் கூட்டத்தின்  தீர்மானங்களை எழுதியுள்ளனர். 

திமுக

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் துரை, சந்திரசேகர், ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றது குறித்தும் கட்சியில் அவர் எப்படி வளர்ந்தார் என்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களை எம்.எல்.ஏ-க்கள் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படும் தமிழக அரசின் முத்திரையிட்ட லெட்டர் பேடில் எழுதியுள்ளார்கள். தஞ்சை மாவட்ட தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் துரை.சந்திரசேகர். இவர் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட லெட்டர் பேடைதான் கட்சியின் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர் என எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுவதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.லெட்டர் பேட்

இது குறித்து அ.ம.மு.க-வின் வழக்கறிஞர் நல்லதுரையிடம் பேசினோம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக முக்கியமான தேவைகளுக்கு  பயன்படுத்துவதற்காக நீல நிற கலரில் அரசு முத்திரையிடப்பட்ட லெட்டர் பேட் கொடுக்கப்படும். இவற்றை தி.மு.க-வினர் கட்சித் தீர்மானங்களை எழுதுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். இது பெரிதும் மதிக்கக்கூடிய அரசு முத்திரையை அவமதிக்கும் செயலாகும். மத்திய அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ-க்கள்  என பலர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவர் கூட இது தவறு எனக் கூறாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

துரை.சந்திரசேகரிடம் இது குறித்து கேட்டோம், நான் 2006-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கொடுக்கபட்ட லெட்டர் பேடில் கொஞ்சம் மிச்சமிருந்தது அவை பழுப்பு கலரில் மாறி வீணாவதுபோல் இருந்தது. அதில் அரசு முத்திரையை அடித்து விட்டு  கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்தை  டைப் அடிப்பதற்காக ரப்பாக எழுதினோம், புதிதாக கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் உள்ளது அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!