Published:Updated:

''ஷோபியாவின் செல்போன் முடக்கப்பட்டது... பாஸ்போர்ட் முடக்கம் நடைபெறுகிறது!'' - தந்தையின் பதட்டம் #VikatanExclusive #LoisSofia

தற்போது ஷோபியாவின் சிம் கார்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட்டையும் முடக்கும் முயற்சி நடப்பதாகவும் அவரது தந்தை சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

''ஷோபியாவின் செல்போன் முடக்கப்பட்டது... பாஸ்போர்ட் முடக்கம் நடைபெறுகிறது!'' - தந்தையின் பதட்டம்  #VikatanExclusive  #LoisSofia
''ஷோபியாவின் செல்போன் முடக்கப்பட்டது... பாஸ்போர்ட் முடக்கம் நடைபெறுகிறது!'' - தந்தையின் பதட்டம் #VikatanExclusive #LoisSofia

`பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனத் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா குரல் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஷோபியாவுக்கு ஆதரவாக, சில கட்சிகளும் அமைப்புகளும், சமூக வலைதளமும் குரல் எழுப்பின. இந்நிலையில், ஷோபியாவின் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சி நடப்பதாகவும் அவரின் தந்தையான  சாமி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஒரே நாளில் பிரபலமான இந்த ஷோபியா யார்?

தூத்துக்குடி, கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், சாமி. ஓய்வு பெற்ற செவிலியர் கண்காணிப்பாளர், மனோகரி. இவர்களின் மகள்தான், லூயிஸ் ஷோபியா. இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர். தூத்துக்குடியில் உள்ள கான்வென்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், டெல்லியில் இளநிலை இயற்பியலும், ஜெர்மனியில் முதுநிலை இயற்பியலும், கனடாவில் முதுநிலை கணிதமும் முடித்தவர். தற்போது, கனடாவின் மான்ட்ரீயல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில், தூத்துக்குடியில் நடந்த துப்பக்கிச்சூட்டு கலவரத்தின் பின்னணி, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையின் வரலாறு, விதிமீறல்கள் ஆகியவை குறித்தும், தேர்தல் நிதியாக பா.ஜ.க-வுக்கு வேதாந்தா குழுமம் எவ்வளவு தொகை வழங்கியுள்ளது என்பது குறித்தும் கட்டுரைகளாக `தி வயர்’, `தி போலீஸ் புராஜெக்ட்’ ஆகிய இணையதளங்களில் எழுதினார். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குத் தமிழகத்தைத் தாண்டி தமிழர்களின் குரல், வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக எழுந்தது. கனடாவில் தமிழர்கள் ஒன்றிணைந்து கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஷோபியாவும் கலந்துகொண்டாராம்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமூக ஆர்வலர் வளர்மதியை போலீஸார் சித்ரவதை செய்ததைக் கண்டித்தும், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வேதாந்தா  குழுமத்துக்கு எதிராகத் தனது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளார்.

சம்பவ நாளில், விமானத்தில் வரும்போதே, ``நான் இப்போது தமிழிசை செளந்தரராஜனுடன் விமானத்தில் இருக்கிறேன். `பாசிச பா.ஜ.க. ஒழிக' என கோஷம் எழுப்ப வேண்டும் எனத் தோன்றுகிறது என்னை விமானத்திலிருந்து இறக்கிவிடுவார்களோ?' என ட்விட்டரில் பதிவுசெய்திருந்தார். இதற்கு, 300-க்கும் மேற்பட்டோர் ரீட்விட் செய்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஷோபியாவின் தந்தை சாமி, ``தூத்துக்குடி எனக்குப் பூர்வீகம். என் மகள் பிறந்து வளர்ந்து இதே ஊரில்தான். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து வீட்டிலேயே பேசுவாள். அது பற்றிய அவளது பார்வையையும் சொல்வாள். படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றபோதும், சொந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து அவ்வபோது சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவுசெய்வது ஷோபியாவின் வழக்கம். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் ஆரம்பித்தபோதே ஆலையின் பின்னணி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 13 பேர் உயிரிழந்தது குறித்து என்னிடம் வருத்தப்பட்டாள். கனடாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த ஷோபியாவை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற நானும் மனைவியும், இண்டிகோ விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தோம். அப்போது, தமிழிசையைப் பார்த்த ஷோபியா, `பாசிச பா.ஜ.க., ஒழிக, மோடி ஒழிக' என கோஷமிட்டாள். இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. விமானம் தூத்துக்குடிக்கு வந்ததும், `ஏன் அப்படி கோஷம் எழுப்பினீர்கள்?' எனத் தமிழிசை கேட்டார். `எனக்குப் பேச்சுரிமை உள்ளது. அதனால் பேசுகிறேன்' என்றாள் ஷோபியா. `கோஷம் எழுப்பியதற்கு மன்னிப்பு கேள்' என இரண்டு முறை தமிழிசை கேட்டார். `நான் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. கேட்க மாட்டேன்' என்றதும், `உன்னை என்ன செய்கிறேன் பார்' எனச் சொல்லிவிட்டு, வாசலில் நின்றிருந்த  ஆதரவாளர்களை அழைத்தார். அவர்கள் தகாத வார்த்தைகளில் பேசினார்கள். அதைத் தொடர்ந்துதான் கைது, நீதிமன்றம் சென்றது, ஜாமீனில் வெளிவந்தது'' என்றார்.

``இதுபற்றி இனி மீடியாக்களில் குடும்பத்தினர் யாரும் பேசக் கூடாது என போலீஸார் நெருக்கடி கொடுத்ததால், வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இந்நிலையிலும் என் மகள் ஷோபியா உறுதியான மனநிலையில் இருக்கிறாள். உறவினர்களோ, ஷோபியாவின் கல்வி, எதிர்காலம் கருதி பயப்படுகிறார்கள். ஒரு கட்சியை எதிர்த்து கோஷம் எழுப்பியதற்காக 3 பிரிவுகளில் வழக்கு என்றால், பா.ஜ.க,வை விமர்சிக்கும் அனைவரின் மீதும்தான் வழக்குப் போட வேண்டும். என் மகள் பா.ஜ.க.வை எதிர்த்து கோஷமிட்டாள் என்பதைவிட, தமிழிசை இரண்டு முறை கேட்டும் மன்னிப்பு கேட்காததை ஈகோவாக எடுத்துக்கொண்டதுதான் இத்தனைக்கும் காரணம்.

தமிழிசை என் மகள் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், கைது, நீதிமன்ற காவல் வரை விஷயம் சென்றது. ஆனால், தமிழிசை உட்பட அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது நான் கொடுத்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன். நேற்று இரவுடன் என் மகளின் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்டையும் முடக்கி வெளிநாடு செல்லவிடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது. இதையெல்லாம் சட்டப்படியே எதிர்கொள்வோம்” என்றார் உறுதியாக.