`இது பொருளாதார சீர்குலைப்பு போர்' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்

`பெட்ரோல், டீசல் விலை உயர்வை மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதார சீர்குலைப்புப் போராகவே கருத வேண்டியுள்ளது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 
நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாள்களாகப் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான இந்த விண்ணை முட்டும் விலையேற்றம், மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களின் மீதும் கடுமையாக திணிக்கப்பட்டுள்ளது. இது பால், காய்கறி என அன்றாடத் தேவைக்கான பொருள்கள் முதல் அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்த்தப்படாதபோது, திடீரென இவ்வாறு பெட்ரோலியப் பொருள்களின் விலை அவசியமின்றி தினந்தோறும் உயர்த்தப்படுவது நியாயமில்லாத ஒன்றாகும்.

ஏற்கெனவே பணமதிப்பிழப்பு எனும் தோல்வியுற்ற திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்தது. அந்தப் பாதிப்பிலிருந்தே இன்னமும் அவர்கள் மீள முடியவில்லை. அப்படி இருக்கும்போது தற்போதைய பெட்ரோலியப் பொருள்களின் தொடர் விலை உயர்வை இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட இரண்டாம் பொருளாதார சீர்குலைப்புப் போராகவே கருதவேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான துயரத்துக்கும் கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். மதச்சார்பற்ற கூட்டணி அரசின் ஆட்சியின்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர், உள்நாட்டுப்போர் ஆகியவற்றின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போதுகூட பொதுமக்களின் பொருளாதாரச் சுமையினைக் கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்விற்குக் கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், அதை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!