வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:10 (06/09/2018)

`அழகிரி பேரணியால் நமக்குத்தான் லாபம்!’ - அறிவாலயத்தின் ரியாக்‌ஷன்

`அழகிரியைப் பற்றி யாரும் பேச வேண்டாம். அவர் எத்தனை பேரணியை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின்.

`அழகிரி பேரணியால் நமக்குத்தான் லாபம்!’ - அறிவாலயத்தின் ரியாக்‌ஷன்

தி.மு.க தலைமைக்கு எதிராக மு.க.அழகிரி நடத்திய பேரணி, அறிவாலயத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 'அமைதிப் பேரணியில் தி.மு.க-வின் கொடி தூக்கிச் செல்லப்பட்டதைக் கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஸ்டாலினும் மௌனம் காக்கிறார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி சமாதி வரையில், நேற்று அமைதிப் பேரணியை நடத்தினார் அழகிரி. "இந்தப் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்; இவர்கள் அனைவரையும் கட்சியைவிட்டு நீக்குவார்களா" எனக் கேள்வி எழுப்பினார் அழகிரி. இதற்கு தி.மு.க நிர்வாகிகள் ஒருவர்கூட பதில் அளிக்கவில்லை. நேற்று காட்பாடி தொகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் பேரணி குறித்து கேட்டபோது, 'நோ கமென்ட்ஸ்' என்றதோடு முடித்துக்கொண்டார். அதேநேரம், அமைதிப் பேரணியில் எதிர்பார்த்த கூட்டம் வராததால், அழகிரி ரொம்பவே அப்செட். அதனால் இந்தக் கோபத்தை அவர் ஆதரவாளர்களிடம் காட்டிக் கொண்டிருந்தார். 

"இப்படியொரு பேரணி நடத்தப்பட்டதை ஸ்டாலின் ரசிக்கவில்லை. நேற்று அவர் மிகவும் வருத்தத்தில் இருந்தார்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், "அழகிரியின் பேரணி நடந்துகொண்டிருந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டவர்கள், ஸ்டாலினை சந்திப்பதற்காக வந்திருந்தனர். கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக அவர்கள் வந்திருந்தனர். அதேநேரம், அழகிரியின் பேரணியால் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் மகிழ்ச்சியோடு இருந்தனர். 'இப்படியெல்லாம் பேரணி நடந்தால்தான் நமக்கு வரவேற்பு கிடைக்கும்' என அவர்கள் நினைக்கின்றனர். அவர்களில் சிலர், 'பேரணிக்கு எத்தனை பேர் வந்தார்கள், திருச்சியிலிருந்து எத்தனை பேர், புதுக்கோட்டை கணக்கு என்ன?' என விசாரித்தபடியே இருந்தனர். 

அழகிரி பேரணி

ஆனால், ஸ்டாலினோ, 'அழகிரியைப் பற்றி யாரும் பேச வேண்டாம். அவர் எத்தனை பேரணியை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கருணாநிதி சமாதி முழுவதும் வடசென்னை சேகர்பாபு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சமாதியில் கழக மாவட்ட செயலாளர்கள் மலர் வளையம் வைப்பது என்றாலும், அவர் அனுமதி கொடுத்தால்தான் செல்ல முடியும். இல்லாவிட்டால், வரிசையில் வந்தபடிதான் மாலை வைக்க முடியும். நேற்று சேகர்பாபு ஊரில் இல்லை. நேற்று முன்தினம் விடுப்பு எடுத்துக்கொண்டு போனவர், இன்று காலைதான் அறிவாலயம் வந்தார். அவரைப் பார்த்த சீனியர் நிர்வாகி ஒருவர், 'என்ன லீவு முடிஞ்சிருச்சா' எனக் கலாய்த்தார். அவரும் சிரித்தபடியே, 'என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க' எனக் கூறியபடியே நகர்ந்துவிட்டார். நேற்று நடந்த பேரணியில் கட்சியின் சீனியர்களை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம், கட்சிக் கொடியை அழகிரி தரப்பினர் கையில் எடுத்துக்கொண்டு போனதுதான். 

கொடியைத் தூக்கிக்கொண்டு பேரணி நடத்தியதற்காக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அமைதி காத்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 'இந்த நேரத்தில் இது தேவையில்லாத நடவடிக்கை' என ஸ்டாலின் நினைத்தாரா தெரியவில்லை. கட்சியைவிட்டு ஒருவரை நீக்கிவிட்டால், கட்சிக் கொடியின் நிறத்தினாலான ஆடையை அணியக் கூடாது; கொடியைப் பறக்கவிடக் கூடாது என்பது விதி. கொடிதான் எங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கிறது. அழகிரி மீது புகார் கொடுக்க வேண்டிய இடத்தில் அமைப்புச் செயலாளர் இருக்கிறார். அவரும் அமைதியாக இருந்துவிட்டார். தி.மு.க-வைவிட்டு வைகோ பிரிந்தபோது, கட்சிக் கொடியை ஏந்திக்கொண்டு அவரின் ஆதரவாளர்கள் சென்றனர். நாங்கள் கொடியைப் பிடுங்கி, அவர்களை விரட்டியடித்தோம். கொடி விவகாரத்தில் ஸ்டாலின் உத்தரவை எதிர்பார்க்காமல் மாவட்டச் செயலாளர்களே புகார் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். கருணாநிதியின் குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு அழகிரிக்கும் இருக்கிறது. ஆனால், கட்சியின் கொடி என்பது தொண்டர்களின் ரத்தத்தில் உருவானது. அப்படிப்பட்ட கட்சியின் கொடியை, நீக்கப்பட்டவர்கள் தூக்கியதை அனுமதிக்கவே முடியாது" என்றார் ஆதங்கத்துடன்.