``15 அமைச்சர்கள், 70 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் வரத்தயார்” - காரணத்தைக் கூறும் புகழேந்தி | "15 ministers, 70 MLAs are ready" says Pugazhendhi

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (07/09/2018)

கடைசி தொடர்பு:11:12 (07/09/2018)

``15 அமைச்சர்கள், 70 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் வரத்தயார்” - காரணத்தைக் கூறும் புகழேந்தி

``15 அமைச்சர்கள், 70 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கின்றனர்” என்று அ.ம.மு.க புகழேந்தி அதிரடியை கிளப்பி இருக்கிறார்.

புகழேந்தி

அ.ம.மு.க கர்நாடக மாநிலக்கழகச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி புதுச்சேரி வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``விமான நிலையத்தில் கண்டனக் குரல் எழுப்பிய மாணவி ஷோபியாவுக்கு பா.ஜ.க தலைவர் தமிழிசை அறிவுரை கூறி அனுப்பி இருக்கலாம். ஆனால் மாநிலத் தலைவர் பதவியில் இருக்கும் அவர், அந்தச் சிறிய பெண்ணிடம் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரின் அந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எதையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத தலைவியாகத்தான் தமிழிசையைப் பார்க்கிறோம். இது அரசியல் நாகரிகமற்ற செயல். ஆகவே, அந்த மாணவியிடம் தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சி.பி.ஐ சோதனையில் ஈடுபடமாட்டார்கள். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். ஆனால், அவரோ ‘சி.பி.ஐ, வருமான வரித்துறை யார் சோதனை நடத்தினாலும் அமைச்சர் நாற்காலியை விடமாட்டேன். என்னை முழுவதுமாக குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும்’ என்று கூறுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் எடப்பாடி பழனிசாமி இதை ஊக்குவிக்கிறாரா. இதுதான் ஜெயலலிதா ஆட்சியா. ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆட்சி செய்தபோது சி.பி.ஐ, வருமானவரித்துறை சோதனைகள் நடைபெற்றிருக்கிறதா. ஒருவேளை இப்படியான சோதனைகள் நடைபெற்றிருந்தால் அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்களா. ஆனால், தற்போது இருப்பவர்கள் தமிழ்நாட்டை கூறுபோட்டு கொள்ளை அடித்துக்கொண்டிருக்கின்றனர். அதை எங்கள் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரண்டு நாள்களுக்கு முன்பு கண்டித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் எவ்வளவோ அலைக்கழிக்கப்பட்ட பின்னரும், ஏளனமாக நடத்திய பின்னரும் அவர்கள் எவரும் எங்களை விட்டுச் செல்லவில்லை. உண்மையில் இதுவரை வாயே திறக்காமல் இருக்கும் 15 அமைச்சர்களும், 70 எம்.எல்.ஏ-க்களும் டி.டி.வி.தினகரன் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். தமிழகத்தில் விரைவில் காட்சி மாறும். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாறுவார்கள். வரும் காலங்களில் தொடர்ந்து சோதனைகள் நடக்கும். இனி அவர்களுக்கு சிறைக்குச் செல்லத்தான் நேரம் சரியாக இருக்கும். விரைவில் தினகரன் முதல்வராக பதவியேற்கும் நாள் எங்களின் கண்களில் தெரிகிறது. சசிகலா நலமுடன் இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை யாரும் நம்ப வேண்டாம். வேண்டுமென்றே அப்படி யாரோ வதந்தியை தூண்டி விடுகின்றனர்” என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க