``நாட்டின் பொருளாதாரத்தில் கடும் சரிவு” - மோடி அரசைச் சாடும் மன்மோகன் சிங்

கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவடைந்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

மன்மோகன் சிங்

காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபலின் ‘உண்மையின் நிழல்கள் - தடம் மாறிய பயணம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி போன்றவர்கள் கலந்துகொண்டனர். 

 அப்போது பேசிய மன்மோகன் சிங், பிரதமர் மோடி அரசின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். ``கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவடைந்துள்ளது. விவசாயிகள் பிரச்னைகளை அரசு முறையாகக் கையாளவில்லை. அனைத்து மாநிலத்தின் தலைநகரங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டே உள்ளனர். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாகப் பிரதமர் மோடி புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார். ஆனால், இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துவருகின்றனர். பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்னால், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக வாக்களித்தனர். ஆனால், அவை எங்கே போனது? மோடியின் புள்ளிவிவரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. எளிதாக முன்னேறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது ஆனால், பல சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன. பா.ஜ.க-வின் ’மேக் இன் இந்தியா’ திட்டம் தொழில்துறையில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெண்கள், சிறுபான்மையினர் மிகுந்த அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது. கபில் சிபல் எழுதியுள்ள இந்தப் புத்தகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க அளித்த வாக்குறுதி மற்றும் அவற்றில் எவை நிறைவேற்றப்பட்டவை மற்றும் எவை நிறைவேற்றப்படவில்லை என்பதுகுறித்து முழுமையாக ஆய்வுசெய்த பின்னர் எழுதப்பட்டுள்ளது” என்று பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!