‘மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் இல்லை’- அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சலசலப்பு

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக்காக உழைத்த மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி உறுப்பினர்கள்  கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுக

கும்பகோணத்தில் அதிமுக  நகர கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்,  மடத்து தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.  இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேளாண்மை  துறை அமைச்சர் துரைக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நிர்வாகிகள் பலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் கருத்து தெரிவித்து பேசினார். அப்போது நிர்வாகிகள் அயூப்கான் மற்றும்  ஜான் ஆகிய இருவரும் எழுந்து மேடை நோக்கி சென்று அமைச்சர் துரைகண்ணுவிடம்,  ’கூட்டுறவு சங்க தேர்தலில் பழைய நிர்வாகிகளையே நியமிக்க சொன்னோம் ஆனால் நிறைய பேரை மாற்றி விட்டீர்கள். இதே போல் சத்துணவு ஊழியர்கள்  நியமனத்தில்  அதிமுகவினருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நம் நிர்வாகிகளால் சொல்லபட்டவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. கட்சிக்காக உழைத்த மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது   இல்லை’ என்று கூறினார்கள்.

இந்த கருத்தை வரவேற்று சிலர் எழுந்து  ஒரே நேரத்தில்  கூச்சல் போட்டனர்.இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது  மேலும் அதிமுகவில் மூத்த உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்கவில்லை. அதோடு கட்சி  கூட்டங்கள்  சரிவர நடத்துவதில்லை என சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை கூறி கூச்சலிட்டனர். வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான துரைகண்ணுவின் முன்பு இப்படி நிர்வாகிகள் கூச்சலிட்டு குற்றச்சாட்டுகளை கூறியதால் அமைச்சரின் அதரவாளர்களும் மற்ற நிர்வாகிகளும் திகைப்படைந்தனர்.

உடனே  அமைச்சர் துரைக்கண்ணு எழுந்து   “இப்போது  கூட்டம் நடத்துவது  போல் அடிக்கடி இனி கூட்டம் நடத்தப்படும்.  நமக்குள்  நடந்தது குடும்ப சண்டைதான் யாரும் இதை பெரிதுபடுத்த வேண்டாம் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தை அழைத்து வந்து அவர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்தப்படும். அதில்  அதிருப்தியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றி அவர்களுக்கு தேவையானவை  செய்து கொடுக்கப்படும்”  என்றார். இதனால் கூட்டத்தில்  அமைதி ஏற்பட்டாலும் துரைகண்ணு தன் பேச்சை சீக்கிரமே முடித்து கொண்டு கிளம்பியதால்  கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!