முழு அடைப்புப் போராட்டம்: கிரண்பேடி உத்தரவால் அதிர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள்! | Bharath Bandh Congress Workers shocked by Kiran bedi orders

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (10/09/2018)

கடைசி தொடர்பு:10:43 (10/09/2018)

முழு அடைப்புப் போராட்டம்: கிரண்பேடி உத்தரவால் அதிர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள்!

 முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, கிரண் பேடி வெளியிட்டிருக்கும் உத்தரவு, புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முழு அடைப்பு போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதன் காரணமாக, காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியில், இன்று காலை 6 மணி முதல் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்ப்போக்கள் இயக்கப்படவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகப் பேருந்துகள் மற்றும் கல்லூரிப் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், “நாளை பந்த் போராட்டத்தின்போது அரசுப் பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ எது ஓடினாலும் அதை உடைப்போம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்காரர்கள்மீது வழக்கு போடக்கூடாது. அப்படிப் போட்டால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சொல்லித்தான் பேருந்துகளை உடைத்தோம் என்று நாங்கள் சொல்லுவோம்” என்று கூச்சலிட்டனர். முதல்வர் நாராயணசாமி முன்னிலையிலேயே நிர்வாகிகள் இப்படிக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிரண்பேடி

அதன் எதிரொலியாக, “இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின்போது பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்துவோர்மீது தகுந்த ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்வதோடு, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். கிரண்பேடியின் இந்த உத்தரவால், கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க