வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (11/09/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/09/2018)

`அரசியலை விட்டே விலகத் தயார்!’ - தி.மு.க-வுக்கு சவால்விடும் அமைச்சர் வேலுமணி

‘உங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு நீங்கள் ராஜினாமா செய்தால், நானும் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் விடுத்துள்ளார். 

வேலுமணி

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவர்,“ உள்ளாட்சித் துறையில் தமிழகம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. எனக்கு நெருங்கியவர்களுக்கு அரசு  ஒப்பந்தங்களை அளித்துள்ளதாக தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி என்மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திவரும் இந்த ஆட்சியைக்  கலைக்கவே எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்கின்றனர். முன்னதாக, தமிழக முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் புகார் மனு அளித்தனர். எதிர்க் கட்சியினரின் லிஸ்ட்டில் நான் இருப்பேன் எனத் தெரியும். ஆனால், கடைசியாகத்தான் வருவேன் என நினைத்தேன், இவ்வளவு சீக்கிரம் என் மீதும் புகார் மனு அளித்துவிட்டார்கள். 

ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்தபோது வகித்த உள்ளாட்சித் துறை பதவி, தற்போது விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை சிறப்பாகச் செயல்படுவதனாலேயே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் ஆட்சியைக் கவிழ்க்கவே தி.மு.க பல குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்திவருகிறது. 

தி.மு.க ஆட்சிக் காலத்திலும் பல்வேறு துறைகளில் பல ஊழல்கள் நடைபெற்றன. அதை ஒப்புக்கொண்டு மு.க. ஸ்டாலின், தன் தி.மு.க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு துரைமுருகனுக்கோ, அழகிரிக்கோ வழங்கட்டும். அவர் அவ்வாறு செய்தால், நானும் என் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அல்லது என் மீதுள்ள குற்றத்தை நிரூபித்தால், பதவியை மட்டுமல்ல அரசியலை விட்டே நான் சென்றுவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.