புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் - நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டியதற்காக முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின்

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புற வழி சாலைக்கும் டாக்டர் கலைஞர் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

அதையடுத்து முதல்வர் நாராயணசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், “தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவும் தொடர்ந்து பாடுபட்ட தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில் புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு கலைஞர் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ள தங்களுக்கும், தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாராயணசாமி

புதுச்சேரி 100 அடி சாலையிலுள்ள இந்திரா காந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும், பட்டமேற்படிப்பு மையத்திற்கும் "டாக்டர் கலைஞர்" பெயர் சூட்டப்பட்டும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும் தி.மு.க சார்பில் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்ளும் வேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து  நிற்கப் போவதுமான இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க என்றைக்கும் உணர்வு பூர்வமாக துணை நிற்கும் என்றும், கலைஞர் அவர்களின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்கமுடியாத இடத்தை புதுச்சேரி பெற்றிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!