முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு! அதிர்ச்சியில் சீனியர்கள்

தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு

தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் இதுவரை இருந்துவந்த துரைமுருகன் பொருளாளராகத் தேர்வுசெய்யப்பட்டதையடுத்து, அந்தப் பதவி காலியாக இருந்துவந்தது. இந்த நிலையில், தி.மு.க-வின் பொதுக் குழுவிலேயே அந்தப் பதவியை நிரப்பிவிடணும் என்ற எண்ணத்தில் இருந்தார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், பொருளாளர் பதவியை எதிர்பார்த்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தனக்கு அந்தப் பதவி தராவிட்டால், முதன்மைச் செயலாளர் பதவியைத் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதேபோல், கட்சியின் சீனியரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் தனக்குக் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகப் புலம்பிவந்தார்.

அதேநேரத்தில் எம்.எல்.ஏ-வான எ.வே.வேலு, ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்தப் பதவிக்கு காய் நகர்த்த ஆரம்பித்தார். இதனால், முதன்மைச் செயலாளர் பதவிக்குப் போட்டி ஏற்படும் சூழ்நிலை வந்ததால், யாரையும் நியமிக்காமல் அந்தப் பதவியைக் காலியாக வைத்திருந்தார் ஸ்டாலின். இந்தநிலையில் தி.மு.க-வின் முப்பெரும் விழா விழுப்புரத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு முன்பு, சத்தமில்லாமல் முதன்மைச் செயலாளர் பதவிக்குத் தகுதியான நபரைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார் ஸ்டாலின். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகனிடமும், பொருளாளர் துரைமுருகனிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அதன் அடிப்படையில் முதன்மைச் செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவை நியமிக்கலாம் என்று முடிவாகியுள்ளது. அதன்படி, இன்று காலை அதிரடியாக டி.ஆர்.பாலுவின் பெயரை முதன்மைச் செயலாளர் பதவிக்கு அறிவித்து தி.மு.க பொறுப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஸ்டாலின். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!