அறிவாலயத்தில் விசேஷம்... குவிந்த பி.ஜே.பி. தொண்டர்கள்! | pon.radakrishnan visit to dmk's anna arivalayam

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (14/09/2018)

கடைசி தொடர்பு:18:35 (14/09/2018)

அறிவாலயத்தில் விசேஷம்... குவிந்த பி.ஜே.பி. தொண்டர்கள்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வெளிப்படையாகவே பி.ஜே.பி-யுடன் கூட்டு இல்லை என்று அறிவித்துவிட்டார். மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால், பி.ஜே.பியின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயத்தில் நேரில் வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணன் மட்டும் அல்லாமல் பி.ஜே.பி-யின் தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் மாநிலச் செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணனும், மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள பி.ஜே.பி. நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்துக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இவர்கள் எதற்காக வந்தார்கள்... கூட்டணி பேசவா.. என்றால், அதுதான் இல்லை. தி.மு.கழக வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளவே வந்தார்கள். இவர் முன்பு பி.ஜே.பி-யில் இருந்தவர். அந்த நட்பில் பி.ஜே.பி. தலைவர்களை திருமணத்துக்கு அழைத்திருந்தார். திருமணம் நடக்குமிடம் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் என்று தெரிந்தே அனைவரும் தயங்காமல் வந்தனர்.

முதலில் வந்த பொன்.ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று ஒரு அறையில் உட்காரவைத்தார் காசி.முத்துமாணிக்கம். அந்த அறையில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் கி.வீரமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மேடைக்கு வந்தார். மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பினார். இன்று இரவு அதே அறிவாயலத்தில் நடக்க இருக்கும் வரவேற்பு விழாவுக்கு மேலும், பல பி.ஜே.பி. தலைவர்கள் வர இருக்கிறார்களாம்.