‘ஆட்சியைத் தக்கவைக்கும் ஆதாரம் இருக்கிறது!’ - குமாரசாமி ஆவேசம்

'காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை யாரும் கவிழ்க்க முடியாது' என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடகாவில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றன. முதல்வராக ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி உள்ளார். துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார். இந்நிலையில், அமைச்சரவை இலாக்கா ஒதுக்குவதில் இரு கட்சிகளிடையே மாற்றுக்கருத்து ஏற்படவே, எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டியிருப்பதாகக் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிசெய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, `எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்துவருகின்றன.கோடிக்கணக்கில் பேரம் பேசிவரும் தகவலும் வந்துள்ளது. நான் அமைதியாக இருப்பேனா? இதற்குப் பின்னால் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அனைத்துத் தகவல்களையும் திரட்டி வைத்துள்ளேன். எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறேன். கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எனக்குத் தெரியும்' என்றார் ஆவேசத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!