'உள்துறைக்கு அறிக்கையை அனுப்பவில்லை!' - ஏழு பேர் விடுதலையில் விளக்கம் அளித்த ஆளுநர் மாளிகை

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலைசெய்வது தொடர்பாக, தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை' என ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆளுநர்

ராஜீவ் காந்தி கொலைவழக்கு தொடர்பாக, சமீபத்தியில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்குப் பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலைசெய்வதுகுறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இந்தத் தகவல்கள் பொய்யானவை என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி தமிழக அரசு செய்த பரிந்துரை தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியதாக ஊகத்தின் அடிப்படையில் சில தொலைக்காட்சிகள் விவதம் நடத்தின. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. 7 பேர் விடுதலைச் சற்று சிக்கலானது இது சட்டப்பூர்வமான அரசியலமைப்பு சார்ந்த பிரச்னைகளை உள்ளடக்கிய வழக்கு எனவே இதில் ஆலோசனைகள் தேவைப்படுகிறது.  வழக்கு தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு நேற்றுதான் (செப். 14) வந்தடைந்தது. அந்த ஆவணங்களை ஆழ்ந்து பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 7 பேர் விடுதலையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!