ப.சிதம்பரத்துக்கு கைகொடுத்த ரபேல் விவகாரம்! - கட்சியில் புதிய பொறுப்பு

ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கும் ப.சிதம்பரம், பி.ஜே.பி தலைமையிலான அரசுமீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவருகிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு, ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவர் எழுதிய தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு குறித்து இவர் கேட்ட கேள்விகள் மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. மேலும், நிதி விவகாரங்கள் குறித்து மோடி அரசு கொண்டுவரும் திட்டங்களை, ப.சிதம்பரத்தை வைத்தே பதிலடி கொடுத்துவந்தது காங்கிஸ் கட்சி. சமீபத்தில், ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பி.ஜே.பி அரசுமீது கடும் விமரசனங்களைக் காங்கிரஸ் கட்சி வைத்தது. இது, பி.ஜே.பி-க்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த விவகாகரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு பெரிது என்கிறார்கள் உள்விவரமறிந்தவர்கள். பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அதற்காகச் செலவிடப்பட்ட தொகைகள் போன்ற பல்வேறு புள்ளிவிவரங்களைக் காங்கிரஸ் மேலிடத்துக்கு அளித்தவர் ப.சிதம்பரம். மேலும், இந்த விவகாரத்தில் பி.ஜே.பி-க்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார், ப.சிதம்பரம். ரபேல் ஊழல் குறித்து சிறு புத்தகமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியை, ப.சிதம்பரம் தரப்பு கையில் எடுத்துள்ளது. ப.சிதம்பரத்தின் இந்தத் திட்டம் ராகுல் காந்தியை பெரும் அளவில் கவர்ந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள்.

 'பொருளாதாரத்தில் நிபுணத்துவம் மிக்க ப.சிதம்பரத்தை வைத்தே தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கலாம்' என்ற பேச்சு, சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திலேயே எழுந்துள்ளது. ப.சிதம்பரத்திடம் இதற்கு ஒப்புதல் வாங்கிய பிறகு, இதற்கான அறிவிப்பை இன்று முறைப்படி அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!