``அம்மா எதிர்த்த திட்டத்தை அமல்படுத்தியது வேதனை” -பி.ஜே.பி-க்கு எதிராக முழங்கிய தம்பிதுரை!

செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 'திராவிட இயல் ஆய்வு நிறுவனம்' தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பிதுரை ``தமிழ்மொழியையும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது. மத்தியில் யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம். ஆனால், மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பது கடினம். தமிழகத்தில் இன்று வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது பொய். பன்னீர்செல்வமும், பழனிசாமியும் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார்கள். நாட்டை முன்னேற்றுவதற்கு அதிகாரம் ஒரு இடத்தில் மட்டுமே அதாவது மத்திய அரசிடமே இல்லாமல், மாநில அரசிடமும் இருக்க வேண்டும். சம்ஸ்கிருதத்துக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லை. ஆனால், தமிழ்மொழிதான் முதன்மையானது. 
இந்த நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் மக்களுக்குப் புரியும் வகையில் அவர்கள் தாய்மொழியில் இருக்க வேண்டும். ஒற்றுமையான இந்தியா இருக்க வேண்டும் என்றால் அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்றத்தில் நமது தாய்மொழியில் ஒருகேள்வி கேட்கக்கூட முடியாத நிலை உள்ளது. பாராளுமன்றத்தில் அனைத்து மொழிகளும் பேச சமமான வாய்ப்பு தர வேண்டும். 
மாநில அரசு அனைத்து திட்டங்களையும் செய்வதற்குத் தேவையான நிதியைப் பெற காத்திருக்க வேண்டிய  சூழ்நிலை இப்போது உள்ளது. மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் ஜி.எஸ்.டி-யை கடைசி வரை கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்று அந்த ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே வேதனைதான்” என்று மத்திய அரசை மறைமுகமாக தாக்கிப் பேசினார். சமீபகாலங்களில் பி.ஜே.பி மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறார் தம்பிதுரை. பி.ஜே.பி  தரப்பு தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முயல்கிறது என்று பேசி ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்போது மொழியைக் கையில் எடுத்து பி.ஜே.பி-க்கு எதிராக சாட்டையைச் சுழற்றியுள்ளது, பி.ஜே.பிக்கு எதிராக அ.தி.மு.க நகரத் துவங்கியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!