வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (16/09/2018)

கடைசி தொடர்பு:15:45 (16/09/2018)

”வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து விடாதீர்கள்” உருகிய துரைமுருகன்

”வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து விடாதீர்கள்” என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க-வின் முப்பெரும் விழா விழுப்புரத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பொருளாளர் துரைமுருகன், ”கட்சியில் கட்டுப்பாடுதான் முக்கியம். அது இருந்துவிட்டால் ஆட்சி நம்மை தேடிவரும். அந்த வகையில் தற்போது தி.மு.க கட்டுக்கோப்போடு இருக்கிறது. எப்படி என்று எல்லோரும் கேட்கலாம். பொதுவாக கட்சியின் தலைவர் மறைந்து அடுத்த தலைவர் புதியதாக பொறுப்பேற்கும்போது சலசலப்புகள், புரட்சிகள், கலகம் அல்லது முணுமுணுப்புகள் ஏற்படும்.

துரைமுருகன்

காங்கிரசாக இருந்தாலும் சரி கம்யூனிஸ்டாக இருந்தாலும் சரி. அனைத்து அரசியல் கட்சிகளிலும் இது இருக்கும். ஏன் தி.மு.க-விலேயே அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி புதிய தலைவராக பொறுப்புகளை ஏற்கும்போது சிறு, சிறு முணுமுணுப்புகள் இருந்தது. ஆனால் லட்சாதி லட்சம் பேர் உள்ள தற்போதைய தி.மு.க-வில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைவர் பதவி ஏற்றபோது எந்தவித சலசலப்பும், முணுமுணுப்பும் இல்லை. இந்தியாவிலேயே எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் பதவியேற்ற ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். காரணம் கருணாநிதியின் மகன் என்பதற்காக அல்ல. அவர் செய்த தியாகமும், உழைப்பும்தான்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்து என்ன சாதித்தார்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் என்ன பட்ஜெட் போட்டு திட்டங்களை நிறைவேற்ற ஆளுங்கட்சியிலா இருக்கிறோம்? ஆளுங்கட்சியின் குறைகள், ஊழல்களை சுட்டிக்காட்டி மக்களிடையே எடுத்துரைக்கிறோம். சட்டசபையில் குட்கா ஊழல் குறித்து ஸ்டாலின் ஆதாரத்துடன் பேசினார். அதன் விளைவு இன்று பல அமைச்சர்கள் சிறைக்கு செல்ல உள்ளனர். இப்படி பல ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். தி.மு.க தொடர்ந்த பல வழக்குகளால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ், அமைச்சர்கள் என அனைவரும் எப்போது ரெய்டு வரும், கைது வாரண்ட் வரும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் குறைகளை சுட்டிக் காட்டியுள்ளோம். அ.தி.மு.க-வை நீதிமன்ற படிக்கட்டில் ஏற்றிய பெருமை மு.க ஸ்டாலினையே சாரும். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை தி.மு.க மீது யாரும் சுமத்தமுடியாது. நமக்குள் இருக்கும் கசப்புகளை மறக்க வேண்டும். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை யாரும் உடைக்க வேண்டாம். வேலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை உடைத்துவிடாதீர்கள். பானையில் உள்ள வெண்ணையை மு.க.ஸ்டாலின் திரட்டி நமக்கு தருவார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க