``தி.மு.க கூட்டணியை உடைக்கவில்லை... கட்சியை வளர்க்கிறேன்...” - தஞ்சாவூரில் திருநாவுக்கரசர் பேச்சு | Congress party protest against Central government

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (16/09/2018)

கடைசி தொடர்பு:07:22 (17/09/2018)

``தி.மு.க கூட்டணியை உடைக்கவில்லை... கட்சியை வளர்க்கிறேன்...” - தஞ்சாவூரில் திருநாவுக்கரசர் பேச்சு

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரஃபேல் விமான ஊழல் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வை கடுமையாக விமர்சித்தார். 

போராட்டம்

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் ரஃபேல் போர் விமான பேர ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலில் கண்டனப் பேரணி என அறிவித்து விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஆனால், முக்கியத் தலைவர்கள் வர தாமதமானதால் ஆர்ப்பாட்டத்தோடு மட்டும் முடித்துக்கொண்டனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்  மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், ரஃபேல் விமான ஊழல் குறித்தும் கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

நாராயணசாமி பேசும்போது, ``மோடி தான் பிரதமராக பொறுப்பேற்றவுடன்  90 நாள்களில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி கொடுத்தார். நான்கு ஆண்டுகள் ஆகபோகிறது, இதுவரை செய்யவில்லை இனிமேலும் செய்ய மாட்டார். அம்பானி அதானிக்கு நன்மை செய்யவே அவர் செயல்படுகிறார். அவரால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் இரண்டு சதவித பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. ஏழைகள் வாங்கும் பொருளுக்கு வரி அதிகமாகவும் பணக்காரர்கள் வாங்கும் பொருள்களுக்கு வரி குறைவாகவும் போடப்பட்டுள்ளது. ஊழல் செய்யமாட்டேன் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார். இன்று பல பா.ஜ.க முதலமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால், அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கைகள் எடுத்து திருநாவுக்கரசர் வருகிறார். மோடியை எதிர்த்துப் பேசுபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். பக்கோடா விற்பதுகூட வேலைதான் என்கிறார். காவிரி போன்ற பல பிரச்னைகளில் தமிழர்களை  வஞ்சித்த மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

திருநாவுக்கரசர் பேசும்போது, தென்னாட்டு முதலமைச்சர், குட்டி காமராஜர் என  நாரயணசாமியை புகழ்ந்தார். அதன் பின்னர், ``மோடி மக்களை ஏமற்றி ஆட்சிக்கு வந்தவர். ரஃபேல் விமான ஒப்பந்தத்துக்கு அனில் அம்பானியை மோடி தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்றார். தமிழகம் இந்தியாவில்தான் உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வோம் என்றார், செய்யவில்லை. அவர் போட்டது மோடி ஒப்பந்தம் இல்லை மோசடி ஒப்பந்தம். முன்பு 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்றவர் இப்போது ஆளுக்கு ஒரு வீடு தரப்படும் என்கிறார். சுவிஸ் வங்கியில் இருந்து கறுப்பு பணம் கொண்டுவரப்படும் என்றார். ஆனால், தாய்மார்கள் சுருக்குப் பையில் சேமித்து வைத்திருந்த பணத்தை பிடிங்கிச் சென்றுவிட்டார். மோடிக்கு மாற்று ராகுல்தான். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடக்கவில்லை. ஆவி ஆட்சி தான் நடக்கிறது. அ.தி.மு.க-வினர் ஜெயலலிதா சமாதியில் போய் பேசி வருகின்றனர். அவர்கள் எப்படி பேசுகிறார்கள்  என எனக்கும் கற்றுத் தந்தால் நானும் ஜெயலலிதாவுடன் பேசுவேன். எனக்கும் ஜெயலிதாவுக்கும் கொடுக்கல் வாங்கல் நிறைய இருந்தது. அதைப் பற்றி பேசி ஒரு தீர்வு காண்பேன்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இல்லாமலே பா.ஜ.க ஆட்சி நடப்பது தமிழகத்தில்தான். அருண் ஜெட்லியை பார்த்துச் சொல்லிவிட்டுதான் வெளிநாட்டுக்குச் சென்றேன் என விஜய் மல்லையாவே கூறுகிறார். இதை ராகுல் கேட்டதற்கு தற்செயலாக சந்தித்ததுதான் என்கிறார் அருண் ஜெட்லி. தொழிலதிபர்கள் கடன் வாங்கிக் கொண்டு வெளி நாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால், இங்கு விவசாயக் கடன் வாங்கியர்களையும், கல்விக் கடன் வாங்கியவர்களையும் நெருக்குகின்றனர். விஜய் மல்லையா தப்பிச் செல்வதற்கு உதவி செய்த அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஆவி ஆட்சிக்கும் மத்தியில் நடக்கும் காவி ஆட்சிக்கும் முடிவு கட்ட வேண்டும். அது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால்தான் முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற காங்கிரஸ் தொண்டனின் கனவு  நிச்சயம் நிறைவேறும். அப்படிச் சொல்வது ஒன்றும் தவறும் இல்லை. இதற்காக தி.மு.க காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறேன் எனச் சொல்வது தவறு. காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பார்க்கிறேன்” என பேசியவர் பின்னர் செய்தியாளர்களிடம், ``ஹெச்.ராஜா மற்ற கட்சித் தலைவர்களை தரக்குறைவாக பேசி விளம்பரம் தேடி கொள்கிறார். அவர் பேசும் வார்த்தைகளை வைத்து மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இப்போது  நீதிமன்ற நீதிபதிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதற்கு யாராவது வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள். போர்க் குற்றங்களை புரிந்த ராஜபக்‌ஷே காங்கிரஸ் கட்சி உதவியது என்று சொல்லவில்லை. இந்திய அரசு உதவியது என்றுதான் சொல்கிறார். அவர் செய்த குற்றங்களை எதையாவது சொல்லி மறைக்கப் பார்க்கிறார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க